Saturday 21 November 2015

நமத்துப்போன தீபாவளி


மத்தாப்பு கரு மருந்து வாசம் மாதிரி
நாசி கிழித்து இறங்கியது இன்று,
தீபவொளிக்கெல்லாம் வந்து 
கொண்டாட்டத்தை நனைக்கிற மழை 
நீர் மூழ்கிக் கிடக்கும் பயிர்களின் மேல் மிதக்கும் அப்பாக்களின் வேண்டுதல்கள்
சம்பாதிக்க நாலுதிசை சென்ற மக்கள் வீடு வந்தும்
மூத்தமகன் வரலையேனு ஏங்கும் அம்மா,
இப்படியாக பட்டணத்துத் தெருக்களில்
பழைய தீபவொளிக் கொண்டாட்ட நினைவுகளில் நனைகயில்
கண்களில் மெல்ல எட்டிப்பார்க்கிறது உப்புமழைத்துளி,
சம்பளம்போடாத முதலாளிக்கு எங்கத் தெரியப்போகிறது
எங்க சம்பளத்தையும் எதிர்பார்த்து ஆடைகள் ரசிக்கும் சிலகண்கள்,
பட்டாசு கொளுத்தும் சில கைகள்,
அரசு நிர்ணயித்த முந்நூற்றைம்பது கோடியில் பங்கெடுத்து
குடிகாக்கும் பெரிய சிறிய உறவுகள்,
வெளியாகும் படத்துக்குப்போய்
ரசிகர்களின் அலப்பறையில் பாதியிலயே பிடிக்காம வெளியேறும் சிநேகங்கள்,
பல ஊர்களிலிருந்து பொங்கலுக்குமுன் சந்திக்கிற சொந்தங்கள் இருக்கின்றன என்று.
இவ்வளவையும் சேர்த்து யோசித்தபொழுது
சிவகாசி பட்டாசுச் சத்தத்தைக் கேட்டு மிரண்டு
செவி வலி பொறாமல் பதுங்குமிடம்தேடி அலையும் நாயாய்
இந்த வருடத் தீபவொளிக் கவிதை. 

பாட்டுப்பழனி

இவன் பாட்டாளிகளின் பாட்டாளி
இவன் படைப்பாளிகளின் பங்காளி 
திரையில் இவன் பாட்டு சுரத்தோடு
தரையில் இவன் பாட்டு அறத்தோடு 
காதோடு கதை பேசும் வானொலி 
ஒவ்வொரு கவிதையிலும் காணொலி
மிச்சமில்லாமல் சொல்லும் தமிழ்ப்பிள்ளை
அச்சமில்லாமல் சொல்லும் ஈழத்துக்கணில்பிள்ளை
சொற்களுக்கு வலிக்காமல் பாலூட்டுவான்
தமிழ்த்தாயிக்கு பலிக்காமல் வாலாட்டுவான்
சொந்தங்களை மறப்பதில்லை இவன் வார்த்தை
நொந்தவர்களை அணைக்காமலில்லை இவன்வாழ்க்கை
புழுதிகளைப்பற்றியே பாடி அழகானவன்
பணத்தைபற்றியோ பழகானவன்(பழகான் அவன்)
பூக்கும் மலருக்கு வரலாறு நோக்கு படைத்தவன்
பாவலர் சிலருக்கு தகராறு மூக்கு உடைத்தவன்
இவன் வாழுகின்ற காலங்களில் தமிழின் முகத்தை
எவன் தாழுகின்ற வேளைகளில் கீறும் நகத்தை
வைக்க அனுமதியாதவன்-தமிழ்
தைக்க அறிவுமதியானவன்.
ஊருக்கு வேண்டுமானால் இவன்பாடலாசிரியர்-தமிழ்
தேருக்கு இவன்தான் வடமானவன்
காரணம் தடம் மாறாதவன்
என்றும் கவிதைத் தரமானவன்.
கவியரங்கில் சொற்களை நெருப்பாக்குவான்
தன்னையே தமிழுக்கு செருப்பாக்குவான்
பட்டிக்காட்டை மறக்காத பாட்டுப்பழனி நீ
விதைத்தால் ஏமாற்றாத கரிசக் காட்டுக்கழனி நீ
எம்கவித்தகப்பனுக்கு மூன்றாம் காலாய் இருந்தாய்
அவர் எழுத்துக்கு ஊன்று கோலாய் இருந்தாய்
அவரோடு நெருங்கிப் பழகா தோசத்தை -அவரின்அசலான
உன்னோடு நெருங்கி விலகா நேசத்தை பெறவேண்டும்
புது மழை போலில்லாமல்
நெடுமழையாய் நீ தரவேண்டும்.
அன்புத்தம்பி. வாஞ்சையுடன் -வாலிதாசன்.

உறவுக்கார விளக்கொன்று.


வெளிச்சங்கள் கூடிப்பேசுவதை 
ஒட்டுக்கேட்டு கொண்டிருக்கிறது
உறவுக்கார விளக்கொன்று, 
கண்டும் காணாமலும்தான் பேசுகின்றன
சற்றும் கோணாமல்நெருங்கி வந்து கேட்கிறது
கேட்டு வந்து இரவின் காதுகளில் ஏதோ சிறு முனுமுனுப்பு வேற நடக்கிறது.
விளக்கு சொன்னதும்
முகம் சிவக்கிறது
முறைக்கிறது
சிரிக்கிறது மாறி மாறி இத்தனையும் நிகழ்கிறது
தூரத்திலிருந்து
கவனித்து நேரடியாகப்போய்
இரவிடம் கேட்கிறேன்
காதருகே வந்து சொல்கிறது
ஒவ்வொரு முறையும் கேட்கும் பொழுது
சிரிக்கிறேன்
முறைக்கிறேன்
முகம் சிவக்கிறேன் மாறி மாறி நடக்கிறது.
இரவு என்னிடம் சொல்வதை
ஒட்டுக்கேட்டுக்கொண்டிருக்கிறது
உறவுக்கார விளக்கொன்று.
-வாலிதாசன்.

Friday 20 November 2015

கவனத்தில் கொள்

கவனத்தில் வைத்துக்கொள்
இம்மண்ணில்
இம்முறை மட்டுமல்ல சிரிப்பு கேட்பது
கவனத்தில் வைத்துக்கொள்
இம்மண்ணில்
இம்முறை மட்டுமல்ல வெடிச்சத்தம் கேட்பது
கவனத்தில் வைத்துக்கொள்
இம்மண்ணில்
இம்முறை மட்டுமல்ல மக்கள் வெளியேறுவது.
கவனத்தில் வைத்துக்கொள்
இம்மண்ணில்
இம்முறை மட்டுமல்ல உரிமை கேட்பது
கவனத்தில் வைத்துக்கொள்
இம்மண்ணில்
இம்முறை மட்டுமல்ல அமைதிப் பேச்சுவார்த்தை பேசுவது
கவனத்தில் வைத்துக்கொள்
இம்மண்ணில்
இம்முறை மட்டுமல்ல அழுகுரல் கேட்பது
கவனத்தில் வைத்துக்கொள்
இம்மண்ணில்
இம்முறை மட்டுமல்ல மனிதநேயம் தோற்பது.
ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு மண்ணிலும்
முதல் தடவைபோல கடந்துகொண்டிருக்கிறது
எண்ணற்ற காரியங்கள் பல.
-வாலிதாசன்.

தொட்டில் பழக்கம்

புலித்தோலின் மீது உட்கார்ந்தபடி
விளம்பரப்பலகைகளில் சிரித்தவாறு 
கையை விரித்தவாறுமாக
ருத்ராட்ச மாலைகளில் தங்கம் மறைந்து 
ருத்ராட்ச மாலையே தங்கமாய் அருள்பாலித்தபடி
மகள் வரைந்து தாளைக் காட்டி சொல்கிறாள்
அவர் துறவியாம் 

நாமும் பார்த்து பழகிவிட்டோம்.
-வாலிதாசன்.

ஆதி வாழ்க்கை

காலில் விழுந்து கை பிடிச்சு வாசக் காத்து காத்துக்கிடந்து கார் கதவு திறந்து பொண்டாட்டி நாப்கின் முதல் சகலமும் வாங்கி விழாக்களுக்கெல்லாம் பொக்கை தூக்கி சிங்கிள் டீக்கு அல்லோலப்பட்டு எல்லாத்தையும் ஒட்டு மொத்தமாய் இழந்து கிடச்ச முதல் பட வாய்ப்பில் பாட்டெழுதி ஊருக்கெல்லாம் போன் செய்து வெளிவராமலயே பொட்டிக்குள் அடைக்காக்கிறதன உணர்ச்சிகளற்று திரை விலகாத ஏக்கங்கள் நிறைய, சக்கையைப்போல உலவ சமாதனத்துக்குள் புகழ
சங்கீதத்தில் சுருள சிரிப்பதே விலக பீடிக்கு பிச்சை லேடிக்கு சொச்சம் நிறைந்து வாழ்கிற தெருக்களில் விளம்பரச் சுவரொட்டிகண்டு தெருவில் சொல்லிச்சொல்கிறான் ஒருவன் "இந்தப்படத்தில் பாட்டெழுதியவன் தன்மானக்கவிஞன் என்று" என்னைப்பார்த்து சிரித்து அவர்களைக்கடந்து முன்னே செல்கிறது கடந்தகால என் ஆதிவாழ்க்கை. -வாலிதாசன்.

கனவு வியாபாரி

நிர்வாணம் பார்த்த 
நாலுபக்கச் சுவர்,
தலை திருகியதும் 
பக்கெட் நிரம்ப விழும் சத்தம்,
பொறுக்க முடியாமல் உமிழ்நீர்
ஒன்டும் ஈசானி மூலை,
கை அலம்ப கால் அலம்பென்று வாங்கி நிறைந்திருக்கும்
வாசனைப்பொருட்கள்,
எல்லாம் அடுக்கிய கழிவறைதான்
எத்தனையோ மவுனம் எழுதும்
அதிலொன்றாய் இதைவைத்துக்கொள்ளலாம்,
பக்கோடா விற்கிறான்
கருமுட்டை விற்கிறாள்
உடைமை விற்கிறான்
உடல் விற்கிறாள்
பட்டாம்பூச்சியை விற்கிறான்
பட்டாடை விற்கிறாள்
செவ்வந்தியை அன்பளிக்கிறான்
சாமந்தியை விற்றது போக மீதியை வீதியில் கொட்டுகிறாள்
ஒரு ரூபாயிக்கு வாங்கி
ஒன்பது ரூபாயிக்கு விற்கிறான் கவுரமாய்
கனவுகளை விற்பதில்
எனக்கொன்றும்
கவுரவக் குரைச்சல் இல்லை.
-வாலிதாசன். .