Tuesday 23 July 2013

மனச் சலவை


பிழிந்து காயப்போட்ட ஞாயிற்றுக்கிழமை தினமொன்றில்
துவைத்து எடுத்தாள் அவளின் ஐநூத்திஒன் பேச்சால்
கள்ளச் சிரிப்பழகால்
நெஞ்சு சிறிது காமக்கறை படிய வைத்து,
அவளின் சர்ப் சிரிப்பால்
சலவை செய்தாள்,
அடித்துக் கும்மியதில்
அடிமையாக்கும் வன்ம நுரைகளை விழுங்கின
வழிந்தோடிய சோப்புத்தண்ணீர்,
அலசியெடுத்து உதறியதில்
தெறித்து விழுந்தன சில வக்கிரங்கள்,
அவளின் அயனிங் மனதால்
சடச்சடவென்று இருக்கிறது
எம் காதல்,
எம் ஞாபகக்குளத்தில்
அவள் விட்டெறிந்தது
கூழாங்கற்களா?
கோரைப் புற்களா?
விழுகின்ற ஒவ்வொரு நிமிடப் பொழுதும்
நினைவு வளையங்கள்
விரிவடைந்துகொன்டே போகின்றன

மண் குவிக்கும் வேர்கள்


சேதிகள் உறவாடும் ராத்திரி
தோழிகளின் பேச்சுகள் இடையே
அவரவர் வருகைக் காரணம்
முணுமுணுத்தன
படிக்க முடியாத நாக்குகள்-

அக்கா கல்யாணத்தால்தான்
படிக்கமுடியாமல்போனது
ஒருதோழிபேச்சாய்-

திடிரென அம்மா இறப்பு
படித்த அக்கா வீட்டுக்குத் துணையாக நிற்க
உடன் எனது பள்ளிக் கால்களும் நின்றன
மற்றொரு தோழி பெரு மூச்சாய்-

முட்டி முட்டி படித்தேன்
மர மண்டைக்கு ஒத்து வரலனு
சில தோழிகள் சலிப்பாய்-

ஒவ்வொருவராக சொல்லச் சொல்ல
கண்ணீரைக் கக்கின
முகில் கண்கள்-

சில பள்ளிச் சீருடைகள் விம்மின
பஞ்சாலைத் தோழிகளின் விடுதியில்,
விவரச் சேதிகள் தொடர
நடுநிசிகடந்து
இருள ஆரம்பித்தன கண்கள்.

வெளிச்சம் பெற அதிகாலை எழுந்து
தனக்கான வாழ்வை தானமைக்க,
கவனிக்க முடியாத நாற்றுகள்
கவனிக்கப் ப டாத வேர்கள்
மண்குவிக்க தயாராகின்றன.

Monday 22 July 2013

வெத்தலைக் கொட்டான்


பழமையான வீட்டுக்குரிய
தூண்கள் தாங்கிய
முதுமையான வீடு

வயதானதால் வாய்
அசைபோடவே
ஆசைப்படுகிறது

பக்கத்தில் எவர் போனாலும்
விரட்டியடிக்க குச்சியோடு
வெத்தலை இடிக்கும் கூன்,

திண்ணை முழுவதும்
குழந்தைகள் ஏறி இறங்கி
விளையாடும்விளையாட்டு
கிழவிக்குப் பயந்து
வருவதில்லை திண்ணைப் பக்கம்.

சாய்ந்தே இருந்தது
கிழவியின் எண்ணம்
குழந்தைகளை விரட்டியடிக்க
சுண்ணாம்பு வெத்தலை
கலிபாக்கு வாங்கிவரச் சொல்ல
கடவில் போவோரைப்
பார்த்துக் கொண்டிருக்கிறது.

எவரையும் காணாததால்
நடக்க ஆரம்பிக்கிறது
கடையை நோக்கி

திரும்பிவந்து பார்க்கயில்
வெத்தலைக் கொட்டான்
விளையாடிக் கொண்டிருந்தது
குழந்தைகளோடு

வாயில்
வெத்தலை போடவில்லை
சிவந்தது கிழவியின் இதயம்

கடவுள் நன்றி


மின்சாரம் நிறுத்தப்பட்டதும்
சரியாக வந்து விட்டார் கடவுள்
குழந்தைகளோடு விளையாட
துள்ளித் துள்ளிக் குதித்து
நன்றி சொல்கிறது
தெருவிளக்கு

Sunday 21 July 2013

பயப் பேய்


நல்லா நினைவிருக்கிறது
எனக்கு
நடுநிசி கடந்த பொழுது அது
எல்லோரும் தூங்கியதற்குச் சான்றாய்
குறட்டை ஒலி,
ஊரெல்லையில் ராமாயி வீட்டு நாயின் குரல்
தூரத்தில் கேட்கிறது,
இரண்டாம் சாம வேளை கடந்ததிற்கு அடையாளமாய்
மேலத்தெரு முத்திருளன்
வைக்கோல் போடுகிறபடியால்
எழுந்து நிற்கும் மாட்டு மணியோசை சப்தம்,
இடுகாட்டை விட்டு
அந்தப் பொழுதில்தான்
செத்துப்போன கருப்பாயி பழஞ்சிறையா ,கிழவன்,
காளையம்மாத்தா, எருமைக்காரி அழகுமலை எல்லோரும் ஊருக்குள் வருவதாய்
அஞ்சு வயசுல அப்பத்தா சொன்ன பேய்க் கதைகள்
நினைவில் அலைகிறது,
தனிமைப் பேய் பிடித்து கதவின் துவாரத்திலிருந்து தெருவைப்பார்க்கும் அந்த இரவில் பயமில்லாமல்
இரை பொறுக்கிக் கொண்டிருந்தன
நடுரோட்டு மின்கம்ப விளக்கடியில் எலிகள்

இம்சை செய்


நீர் தூங்கும் பூமெத்தையான
ஈரக்காலைப் பொழுதில்,
பிரிவின் வலியை சொன்னாலும்
புரியாத குறுந்தோகை மயிலாட்டம்
குடுகுடுக்கிறாய் அன்பே,
நளினமான புன்னகையோடு கூடிய
பேச்சை என்னிடம் பேச எப்படியடி
மன்மதக்கணை தொடுக்க கற்றுக்கொண்டாய்,
உனக்குபிடித்த நாய்க்குட்டிகள்,கன்றுக் குட்டிகள்
கக்கத்தில் தூக்கிதொளுவத்தில் விட்ட தைப்போல
மகிழ்ச்சியில் துள்ளிக் கொள்கிறது
அவ்வப்போது உன்னோடு உரையாடும் பொழுதின் மனம்,
அம்மாவிடம் என்ன வசியம் செய்தாயடி பெண்ணே
அடிக்கடி கேட்க ஆரம்பித்துவிட்டாள் உன்நலம் பற்றி
உன் வேலைப் பளுவால் பேசாக்காலங்கள்
நெஞ்சுக்குள் குத்தவைத்துக்கொண்டு
குறிகேட்க ஆரம்பித்துவிடுகிறது
மீண்டும் எப்போது அவளிடம் பேசுவாய் என்று
காலையில் பரபரப்பாகி
மாலையில் ஓய்ந்துகிடக்கும்
கிராமத்து ஒத்தையடி பாதையாய் பரிதவிக்கிறது
நாள் தள்ளிக்கொண்டு போகும் இடைவெளியால்
அன்பே வா வா
அனுதினமும் இம்சை செய்
இப்போதும் அப்படித்தான் செய்யினும்
இன்னும்கூடுதலாய் இம்சை செய்யடி
உன் இம்சையே எனை இருக்கிப்போடட்டும்
இந்த ஜென்மம் முழுவதும்....  

Friday 19 July 2013

கவிப்பேரரசு வைரமுத்து உடன்

                                 என்னை வசீகரிக்காத கவிஞரான வைரமுத்து அவர்கள் மீது இன்று அவரின் மாந்த நேயப் பண்பைக் கண்டு, அவரின் மீதான மதிப்பு உயர்ந்தது, எம் கவித்தகப்பன் வாலி அய்யா பூவுடல் ஊர்வலத்தில் பின் சென்றோம், புறப்பட்ட பின் எதிர்வயப்பட்ட திரு.வரைமுத்து அவர்கள் புறப்பட்ட வாகனத்தை நிறுத்தாது போகச் சொல்லிட்டு, கற்பகம் நிழற்சாலையில் வந்து செருகினார், அங்கிருந்து வருத்தத்தை நெஞ்சுக்குள் முடிச்சிட்டுக் கொண்டார் போல, எம் ஆர் சி நெடுஞ்சாலையில் வாகனம் கடக்க கடக்க அவிழத்துவங்கியது, கைக்குட்டை நனைத்துக் கொண்டது, சில சமயம் ஏக்கப் பெரு மூச்சொறிந்தார், நடந்து கொண்டே போகினோம், பாலம் கடந்த பின்னும் வானம் நோக்கி இட வலமாக திரும்பிப் பார்த்தபடியே நடக்கத் துவங்கினார்,எந்த எந்த இடமென்று பார்வைக் குறிப்பொடு தலையசைத்துக் கொண்டு, வாலித்தமிழ் இல்லத்தின் தூரம் அதிகரிக்க அதிகரிக்க மழையழத்துலங்கியது, வானத்தின் போதிநீர்த்திவலைகள் கவிஞர் வைரமுத்துவின் ஆடை துளைத்துக் கருத்த யாக்கை நனைக்க நனைக்க உதவியாளர்" அய்யா வாகனத்தில் ஏறளாமானு வினவினார்" வேண்டாமென்று பெருங்குணத்தால் நிராகரித்தார், மயானம் நெருங்க நெருங்க மிக உக்கிரமாக அழத்துலங்கியது கவிதை பிடித்த வானம், சாலையில் சாக்கடை யோடு நிரம்ப நீரில் கால் நனைத்து நடந்தேகினார் வீறு குன்றாது,பின்னால் சில அரசியல் சாக்கடைகள் வேட்டியைத் தூக்கிக் கொண்டன, அந்த இடம் கவிஞரின் ஆடைமீது கவனம் கொள்ளாது, ஒரு வாக்கியம் சொன்னார்"கவிஞர் முகத்தில் தூறல் விழாமல் பார்த்துக்கோங்கவென்று" மேலும் அழத்துவங்கினேன் மவுனம் உடைத்து, பெசண்ட் நகர் மின் மயானம் வந்தடைந்தது. கவிஞர் வைரமுத்து அவர்களின்இந்தக்குணம்எம்மை அவர்மீது உயர்வான மரியாதைச் செலுத்த வைத்துவிட்டது.
மகோரா (எம்.ஜி.ஆர்) இறுதி ஊர்வலத்தில் இப்படி நெடுந்தூரம் கவியரசு கண்ணதாசன் நடந்ததாக கேள்வி, இன்று கவிதை வங்கி வாலிக்கு கவிப்பேரரசு வைரமுத்து,
கவியரசு கண்ணதாசனைப் பார்க்கப் போயிட்டார் திரைப்பாட்டு மார்க்கண்டேயர் வாலி அய்யா,  

என் கிராமத்துல நான்