Saturday 22 June 2013

மண்வாசம்


திடீர்
உன் வருகை
வெப்பச் சலனத்தால்
பெய்த மழையைப் போல பரவுகிறது
மண்வாசம் வீடெங்கும்.

அறுபடாத கொடியின் நஞ்சுப் பக்கங்கள்.... தாயின் வாயில் சேயின் உயிர்...

தலைமுறைப் பஞ்சம் தலை விரித்து
தரை மண் புழுதியான காலம்,
காலாரா நோய் குத்தகைக்கு எடுத்த
கொலைப் பசிக் கிராமம்,
கோரைப் புல்லால் மேய்ந்த குடிசையில்
கணவன் அப்பனோடு வயிறு வற்றிய கர்ப்பிணி,
கரட்டுக்காட்டு வரப்புகளில்
அன்றாடப் பசி தகிக்க கிழங்கு பறிக்கப் போனதில்
மாமன் இறந்த செய்தியொட்டி புருஷனின் கைகளில்
ஒன்றிரண்டு கொட்டுக் கிழங்குகள்,
பச்சத் தண்ணீர் பசியாற்றி
அரைத் தூக்கம் கழிந்தது அற்றைய நாளில்,
மறு தினம்
கத்தாழைக் காட்டுப் பகுதியில்
இரை தேடிச் சென்ற தாலியின் கால்கள் திரும்பவேயில்லை,
வழக்கத்துக்கு மாறாய் அந்நாளில்
வெறித்துக் காஞ்ச வானத்தில் வட்டமிட்டபடி
காகக் கூட்டமும், மகிழ்ச்சிப் பருந்துகளும்.
இரவைக் கவிழ்த்தி, பகலை அணைக்கிற சூரியன் கடந்த
அடுத்த கணம் வீட்டுக்குள் வலியோடு
வயிற்று நெருப்பிலிருந்து ஒரு கதறல் ஒலி
யாருமில்லா ஊர்களில் ஏகப் பரவுகிறது,
ஊரைத்தின்ற பசி காண மெல்ல திறக்கிறது
நஞ்சுக் கொடி அறுபடாமல் பச்சிளம் கண்,
தாய்மையின் உலக வழக்கத்தை எட்டி உதைந்துவிட்டு
பஞ்சத்தின் பசியில்
கழுகாகிறாள் தாய்,
ஈன்ற வயிற்றுக் கோரப் பசியால்
பிய்க்கிறாள் இரண்டு கைகளில்,
குடிசையை விட்டு வெளியேறத் துடிக்கிற
அந்தத் தலைமுறைப் பஞ்சத்தின்
கடைசி உயிரின் வயிற்றை....

Thursday 13 June 2013

தாம்பத்திய தர்மம்.


ரகசியம் கசியும் படுக்கை அறையில்
கட்டி உருளும் ஒதுக்கப்பட்ட காலம்
வருந்தாச் சிரிப்பில் நனையும்
உன்னுடம்பும் என்னுடம்பும்
விடிந்த பின்னும் வெட்கத்தில் அசைகிறது
தாம்பத்திய தர்மம்.

பிரதிப் புன்னகை


பிரதி எடுக்காத அவளின் புன்னகையிடம் இருந்து
கடன் வாங்கினால்,
ஒரு நாட்டிற்கான வெளிச்சத்தை கொடுக்கிறாள்
அவளின் தலை உலர்த்தலில்,
மிக நெருங்கிய கனம்
மௌனத்தைத் தந்தவள்,
விரிவான உரையாடல் ஆகிப் போகிறாள்,
தனித்திருக்க என்னை விட்டுச் சென்ற நாட்களில்.

-------------------------------------------
When I Received the credit from the
Non-copied smile of my beauty
She gave radiance for the country
In the drying process of her hai
She gave the silence
Of the most intimate moment.
She became a comprehensive conversation
When she left me alone on the day.

-தமிழில்:முகவை வாலிதாசன்
-ஆங்கிலத்தில்:சேலம் ச.கோபிநாத்

பஞ்சாயத்து ஞாபகம்


கோவம்கோவமா வருது
ஊரணிக்கரை மீது,
கண்கொட்டாமல்
நேரே நின்று பார்க்கிறது
நீராடும் அவள் அழகை,
மறைந்திருந்துப் பார்த்த என்னைத்தான் ஏசி
பஞ்சாயத்தைக்கூட்டி அவமானப்படுத்துகிறாய்
ஓர வஞ்சனைக்காரி,
மறக்கவே இல்லை
இன்னும்
அவளும் நானும்,
சிறுசிறு ஊடலின் போது
பேசா நொடிப்பொழுதுகளில்
சொல்லிச் சொல்லி
மீண்டும் மீண்டும்
புதுவாழ்க்கைக்கு அழைத்துச்செல்கிறது
அவமானப்படுத்திய அவளின் பஞ்சாயத்து ஞாபகம்.......

நனையாப் பக்கங்கள்


அம்மா சொல்லும் பேய்க்கதைகளில்
அலறவைத்துவிடும் நடுச் சாமங்களில்,
"அம்மா அண்ணன் மோன்டுட்டான்
பாவாடையில மூத்திற நாத்தமென்று"
காலை எழுகையில்
தங்கச்சி சத்தம்போட்டு கூப்பாடுபோடுவா ,
சும்மா இருக்கமாட்டாள்
 கேதாற வீட்டுக்குப் போயிட்டு வந்த அம்மா,
பிணமாகிப்போன பக்கத்துத்தெரு
பெரியாத்தாவக் கட்டிப் பிடித்து
மூக்குச்சளியை முந்தானையில் நனைத்து
அழுதுவிட்டு வந்த அன்றிரவு ,
உணவுண்ட பின் நிலா முற்றக் கதையிலே
இறந்த பெரியாத்தா நினைவைப்
பேசுறதக் கேட்ட இரவு தினத்தில்
நனைய ஆரம்பித்திடும் மூத்திர இரவு,
அப்படி பல நடக்கும் ,
இப்ப கார்ட்டூனுக்குள் மையம் கொள்கிறது
மழலை இதயம்,
அம்மா சேலை, அப்பா வேட்டி நனைத்து
காலையில் திட்டிக்கொண்டே
கசக்கிய காலம் பொற்காலம் தானே,
நனையா பக்கங்கள்
நெஞ்சில் ஏராளம்தானே எல்லோருக்கும்

தாவி வரும் ஜன்னல்


தினமும் அப்பாவிடம்
அம்மா சண்டை
அடகு வைத்ததை மீட்டுத் தரச் சொல்லி,

கொஞ்ச நாள் பொறு
அறுவடை முடிந்ததும்
மீட்டிரலாமென அமைதிப்படுத்தும் அப்பா

நகரத்துக்குப் படிக்கப்போன
அக்கா
பெரிய மனுஷியாகி
தோழிகளுடன் வந்து கொண்டிருப்பதாய்
பூப்படைகிறது வீடு,

மஞ்சள் பூசுகிறது
தெருவோரத்தில்
போகிறபோக்கிலே
வீசி விட்டு சென்றவளின்பேச்சு,

அறுவடை அமோகம்
சந்தோஷமாக இல்லத்தில்
மாமாவின் குடும்பத்தினர்

நீராட்டு முடிந்து
திரும்புகிறது வெம்மைக் காற்று
பள்ளிக்குச் சென்று விட்டாள் அக்கா

ஆரம்பமானது மீண்டும்
அடிக்கடி அப்பாவிடம் அம்மா சண்டை
அடகு வைத்ததை மீட்டுத் தரச் சொல்லி

ஈதொன்று கேட்பீர்



கம்மஞ் சோறுதான்
என்றாலும் கவலை இல்லை
கருவாட்டுக் குழம்புதான்
என்றாலும் கணக்காவதில்லை,
ஆனாலும்
ஒரு அகப்பை தான் கிடைக்கும்
நேரம் தவறினால்
அதுவும் கிடைக்காது
தம்பியிடம் சண்டையும் நிற்காது,
உழுகப்போன அப்பா
கொண்டு வரும் மீதிக் கஞ்சிக்காக
காத்திருப்பாள்
அவளுக்கான பங்கைப் பெறத் தாய்,
வரப்பில் வைத்த கஞ்சிச் சட்டியைத்
தட்டிவிட்டு பசிபோக்கும் காக்கைகள்
உழுகும் மாட்டின் முதுகில்
சவாரி செய்யத் தயாராகும்.
உழுத களைப்பில்
பசியாறத் திரும்பும் வியர்வை அருவிக்கு
கவிழ்ந்த சட்டியே மிச்சம்,
கஞ்சியில்
காக்கை வாயும்
கரிசக் காட்டு மண்ணும் வழிந்தோடும்
பசியாற சிந்திய கஞ்சியெடுத்து
ஊதிக் கொண்டிருக்கும்
நாவில் நீரற்ற உதடு,
வாய்க்கு எட்டிய புற்களை மேய்ந்து
காலிச் சட்டியை சுமந்து
வீடு திரும்பும்
உழுத காளைகளுக்கு முன்னே
நடக்கும் கலப்பை சுமந்த பசி,
மாடு அவிழ்த்துக் கட்டும் முன்
கஞ்சித் தண்ண்ணி கேட்டு
கொதிக்கும் வற்றிய குடல்,
வீட்டுக்குள்
தலைப்பாகை எடுத்து
உதறும் போது விழும்
ஏங்க மீதிக்கஞ்சி இருக்கா"
என்றவளின் பேச்சு.
*(ஏழைகள் அதிகம் சாப்பிடுவதால் விலை ஏறுகிறதென  உரையாற்றிய பிரணாப் முகர்ஜிக்கு சமர்ப்பனம்)

Sunday 2 June 2013

வீட்டுப்பாடம்




வாசலுக்கு வந்து கிடந்தன
வயிறு மெலிந்த
சமையல் பாத்திரங்கள்
அடகு வைத்தவை போக
பூட்டப்படாத வீடு
கழற்றி வீசப்பட்டுக் கிடந்தது
மானத்தை இழந்த வாசல்,
பாத்திரம் தேய்க்கப் போன 
தங்கச்சித் துணிமணிகள்
கொம்பின்றிக் கொடி பிடித்தன
வீட்டு முற்றத்தில்-
மூலையில்  ஒதுங்கி  இருந்தது
அதட்டலுக்கு
அக்காவின் பயம்,
தாய் கோபித்துக்கொண்டுபோனதை
பக்கத்துத் தெருவிலிருந்து
பாட்டி சத்தம்
அசிங்க அசிங்கமா சொன்னது,
எட்டி உதஞ்ச தண்ணீர்க் குடமோ
ஏனோ தானமாய்.
கைலி அவிழ்ந்து கிடந்த
தந்தை அருகில் 
மதுப்பாட்டில் உசாரற்று-
முதுகில் புத்தகப் பாரத்தோடு
பார்க்கும் போது  
நினைவு வந்தது
ஜோதி டீச்சரின் வீட்டுப்பாடம்.