Friday 31 May 2013

நடுவுல கொஞ்ச பக்கத்தக் காணோம்


இருபது வயதுக்குவந்த
ஒவ்வொருவரும்
அவர்களுக்கு வருகின்ற
பருவப் பிரச்சினையை
மறைக்கின்றதைப் போலக்
கூச்சப்பட்டிருக்கும்
அந்த மேல் நிலைப் பள்ளி,

விழா மேடையில்
ஜனவரி26 இன்றென
சுதந்திரதினத்தன்று
மாற்றிச்சொன்ன பேச்சி,

பள்ளி
கலை நிகழ்ச்சிகளுக்கு
பெண்வேடம் போடும் சரவணன்,

செல்போனில் நண்பர்களுக்கு
பெண்களைப்போல
பேசச் சொல்லி
உசுப் பே த்தும் பலகுரல் ராஜேஷ்.

ஒரே நிறங்களில்
சேலை , சடைமாட்டி, பூ, செறுப்பு, அணிந்து
பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களோடு
சிரித்து சிரித்து பேசும் பிரியங்கா டீச்சர்.

தினமும்
முதல் பாடவேளையில்
வருகைப் பதிவேடு சுமந்து வரும்
விஜிதா அக்கா,

பெளதிக வகுப்பு
இடையிடையே அதான்டா போட்டு பேசும்
குண்டு வாத்தியார்,

இண்டர்வல் நேரத்தில்
எறும்புபோல போகச் சொல்லி
விசிலும் கம்புமாக கத்திக்கிட்டுத்திரியும்
சொட்டை பி.டி. சார்.

ஏழாம் வகுப்பு
ஸ்டெல்லா டீச்சருக்கு
லவ்லெட்டர் கொடுத்து
ஹெட்மாஸ்டரிடம் மாட்டிக்கிட்ட
தமிழய்யா பாரதி,

இப்படி
பள்ளிக் கால ஞாபகப்புத்தகத்தில்
நடுவுல சில பக்கங்கள்
காணாமல் போகின்றன
காலச்சுழியில்,

நினைவில் நின்ற சில பக்கங்கள் மட்டும்
சந்திக்கின்ற வேலைகளில்
அவசர வாசிப்பை நடத்தி
மகிழ்கின்ற போது
கடந்தகால மகிழ்ச்சியில்
பள்ளிச் சிறுவர்களாகி
ஓட ஆரம்பிக்கிறது நெஞ்சில்,

கருவேல மரம் சூழ்ந்து
நினைவுகள் இடிந்த
கரும்பலகைப் பள்ளிக்கூடம்,
துருபிடித்த கொடி மரம் மட்டும்
எதையோ சொல்வதைப் போலிருந்தது
அவ்வழியே ஊர்க் கோவில்கொடைக்கு
காரில் போகின்ற போது.

முதல் மரியாதை


வேகங்கள் ஊரும் 
முருங்கை மரநிழலில் 
வெக்கை ஒடிய 
ஒதுங்கி களைப்பாறுகிறது 
கொம்பைப்பறித்த முதுமை, 
செறுப்பில்லாமல் நடந்த 
இளமைக்கு பூச்சொறியும் 
காற்றால் மயக்கமுண்ட 
முருங்கைப்பூ

தீராத பிரியம்,



ஊரோரமா
ஒதுங்கி நிற்கும்
வேப்ப மர
பேருந்து நிறுத்தத்தில்
மத்தியான குளுமை,
தலைசாய்த்த களைப்பில்,
உறக்கம் எழுப்பி,
காற்றடித்த
திசை கடத்தி வரும்
வாகனச் சத்த வேகத்தோடு 
ஏறி விளையாடும் ஜீவாக்குட்டி,
முகத்தில் தட்டி தட்டி
அப்பா ஊர் ஊர்னு ஊர ஆரம்பித்தாள்,
ஊர் சுத்தி பஸ் கண்டு,
நெடு நெடுன்னு
விலகிச்செல்லும் ஆசை
தணியாக பயணித்து,
பாதியோடு படிப்பு நின்று
வெளியூர் வாக்கப்பட்டுப்போன
பள்ளித்தோழி பையனோடு இறங்கி,
விட்டுச்சென்ற நினைவைத் தேடி
நிழலாட வந்தது,
தயங்கிய முன்னையப் பழக்கம்,
அவள் மகனிடம்
தம்பி உன்பேரென்ன,
பாரதின்கிற பெயரை
பாதியாக்கி சொல்ல,
அப்பா பேரு தொடங்கி
அம்மா பேரு சொல்லும் போது,
துள்ளிக் குதித்தாள்,
என்பேரு அவுங்க அம்மாவுக்குனு ஜீவாக்குட்டி,
சிருமலோடு
நகர மறுத்த
எச்சக் கால வாழ்க்கையின்
சிறகுகள் வருடின
பள்ளியில் பகிர்ந்த பரிசங்கள்,
குழந்தைகளுக்கு
பெயர் சூட்டுதலில் வாழ்கிறது
தீராத பிரியம்,

ஞானக்காக்கைகள்.



வேண்டுமென்றே 
புலர்காலைப்பொழுதெல்லாம் 
சொல்லிக்கொடுக்கிறது 
உலகுக்கான 
விடியல் பாடத்தை 
ஞானக்காக்கைகள்.

மழைத்துளி



கொதிகலனுக்குள் 
அடங்கிய குளம்,
வெப்ப வன்முறையிலிருந்து

துள்ளியெழுகிறது 
மழைத்துளி.

தேவி எட்டாம்வகுப்பு எஃப் பிரிவு



அது ஒரு
ஞாபகத் தென்றல் வீசிய காலம்
இன்று கைக்குழந்தையோடு
உன்னைப் பார்க்கையில்
மழைக்குக் குக்கிப்போன மிளகாய் செடியாட்டம்
வாடித்தான் போகிறது மனசு,

கணக்கு வாத்தியார்
ரைட் போட்டபின்
யாருக்கு அதிக ரைட் விழுந்திருக்கென
எண்ணிக்கொள்வோமே நான்காம் வகுப்பில்
நினைவிருக்கா?

ஆதாளைச் செடிப்பாலை வாயில் வைத்து
நுரைகண்டு
கிறுக்கு பிடித்தது போல துரத்துவாளே நம் சகதோழி
ஓடி ஒளிவோமே பயத்தை நெஞ்சில் நிறுத்தி
ஞாபகம் இருக்கா?

உன் புத்தகத்தை தோழியொருத்தி லேசா கிழித்துவிட்டாளென
தேம்பித் தேம்பி
மடிக்குள் முகம்புதைத்து
அழுதாயே
ஆறாமல் இருக்கிறது
இன்னுமென் நெஞ்சில்

எனக்கு நல்லா நினைவிருக்கிறது
இண்டர்வெல் தட்டுமணி பெல்லுக்கு
அன்று கூட்டமாய் மான்களைப் போல
துள்ளிக்கொண்டு வந்தீர்கள்
அந்தச் சாலைவீதியெங்கும்
உன் பாதச் சப்தம்
உச்சரிக்கத்தான் செய்கிறது இன்றும்
நீ கடந்து போன பல நாட்களை,

அந்தி பூக்கும் மாலையில்
பள்ளிவிட்ட பின்
கொளைவெட்டபோவோம்,
அப்போது கூட ஒரு சமயம்
மின்னிச்செடியை வெட்டி
பொட்டி நிறைத்து
மேக்குந்தலில் பாலாட்டங்கொளையை
மூடி வந்தபொழுது
வயக்காரரிடம் மாட்டிக்கொண்டதும்
மின்னி நெத்தாக வெடிக்குது
ஞாபகத்தில் இந்நாள் வரை,

நீ ஊரணிக்குள் இறங்கி
குடம் முக்கி
தண்ணியள்ளயில்
உன் முன்னம்
வட்ட வட்டமாக விரிந்து செல்லும்
நீர் வளையங்களாய் நான்,

நமக்குள்ளான
பொருத்தமும்
வருத்தமும்
என்ன தெரியுமா?
ஊரில் நல்ல பேரெடுத்து
ஏமாந்ததுதான்,
கடலும் வானமும்
சேராமல் போனது வருத்தம் தான்
நிலாவின் புன்னகை கண்டு
ரசிக்கும் கடலாக
உன் மெல்லினச் சிரிப்பில்
உயிர் வாழ்கிறேன்,

உன் முகம் பார்த்து எங்கும் சென்றால்
அதிஷ்டமாகுவதால்
உன் தெருப்பக்கம் வருகிறேன்
அடிக்கடி
அதிஷ்டம் மட்டுமல்ல
ஆக்ஸிஜனும் கிடைப்பதால்,

இனிமேல் உன்னைப் பார்க்கக்கூடாதென்று
மனதுக்குள் சபதமிட்டுக்கொண்டு
தெருக்களின் சந்துகளை கடக்கயில்
குறுக்கே வருகிறாய் குலமகலாய்,

நீ
வாக்கப் பட்ட காலம்-என்னுயிர்
தாக்கப்பட்டகாலம்,

உன் நினைவுகளால் ஊருக்குள் உலவுகிறேன்
உன் அன்பைச் சுமந்து தேசத்தில் பரவுகிறேன்,
கோடி வாக்கியம் தேடி கடக்கிறேன்
ஜீவ பாக்கியம் பாடி அழைக்கிறேன்

உன்னைப்போல காதலிக்க....


காத்திருத்தலின்
கவனம் கொஞ்சம் கொஞ்சமாக
கரைகிறது
நீண்ட நெடிய
பொழுது கடந்தும் வராத
உன் பதிலை
உண்டும் செறிக்காத
உணவாகி குமட்டலோடு
துப்புகிறேன்
அரட்டையில்
உன்னோடு செலவழித்த நேரத்தை,
மயக்க மாகிப்போன நிலையில்
கையில் மாத்திரையோடு வரும்
கில்லாடி மருத்துவச்சிடி நீ,
மனசுக்கு லேகியம் கொடுக்கும் வித்தையெல்லாம்
கத்தவளாய் இருக்கும் உன்னைத்தான்
அம்மா சொல்வாள் அடிக்கடி
பாவம்டா அவள்
உன்னைத்தவிர
வேற எதுவும் தெரியாத பச்ச மண்ணு என்று,
புயலின் மவுனங்களா
தென்றலை தீண்டும்?
தென்றலின் மவுனம்தான்
புயலைத்தீண்டுமா?
வலைதளக்காதலில் வளைந்துபோகிற
சுயமரியாதையற்ற காதலின் எதிர்பார்ப்பும்
மழுங்கிப்போய்
ஏமாற்றமும் மிஞ்சிப்போய்
நிலைத்தகவலில் மட்டும் பதிவாகிப்போகிற காதலாகிடாது
பார்ப்பவள்தானடி நீ
பாசாங்குக்காரி......
புதுசா அம்மாவுக்குஎடுத்த சேலை
முந்தானை வாசனை விட
அடுப்படி அழுக்கில் தோய்ந்த
முந்தானை வாசம் பிடித்திருக்கிறது
உன்னைப்போல காதலிக்க....

குள்ளநரிகள்.


சுயநலப்பகல் வேசமிட்டு
அரசியல் இருட்டில்
ஆபாச நடனமிடக் காத்திருக்கின்றன
குள்ளநரிகள்.

முதன்முதலாக வாலிதாசன் இரங்கற்பா பாடியது-ஏழுசுரத்துக்காகும் பாடம்


முதன்முதலாக வாலிதாசன் இரங்கற்பா பாடியது
----------------------------------------------------
பாட்டுச்சக்கரவர்த்தி டி.எம்.எஸ்.க்கு
=======================


ஏழுசுரத்துக்காகும் பாடம்
****************************
இவன் இருந்த காலம்
இசைக்கு மகுடம்

தமிழ்த்தாயின் கலையவையில்
இரண்டிருக்கை இப்போது
காலியானது
முன்னம் கள்வரி விரலோன்
இன்னம் மதுரக் குரலோன்

கண்மூடி தூங்கிறாயே
விழித்துப்பார்
உன் மேனியெங்கும்
மெய் எழுத்தும்
நெய் எழுத்தும்
தலையில் அடித்து அழுவதை
நிலையில் இடித்து விழுவதை

உழைத்துக் களைத்து
வந்தவரெல்லாம்
வானொலியில்-உன்
தேனொலியில்
சோகம் போக்கி ஆழ்ந்துறங்குவர் அன்று-

சோகத்தை எங்களிடம் விட்டு
நீ ஆழ்ந்துறங்கிறாயே
சோகம் போக்க எங்கே போவோம் இன்று;

ஒரு இசைக்கச்சேரியை
இடையில் நிறுத்திய
இறைவா-

இதயக்காயம் ஆத்த
இனிய டி.எம்.எஸ்ஸ தொட்டெழுப்பு
விரைவா;

ஒப்பந்த காலம் முடிந்து விட்டதோ?
சீக்கிரமாக அழைத்துக்கொண்ட
எமன்
எங்களை விடவா
உன் பாடலின் தீவிர ரசிகன்.

கற்பனை என்றாலும்
கற்சிலை என்றாலும்
காந்தக்குரல் முழங்கினால்-
அந்தச்
சாந்தக்
குன்றுத்தலைவனும்- இனிக்
குமுறுவானோ?

கட்டுமர
மீனவக் குடிசைகளுக்கு
தாலாட்டிய நாக்கு-

மீளாத்துயரத்தில்
எங்களை விட்டுப் போகனும்கிறது
யாரோட வாக்கு.

உம்மைக் காணுகயில்
அனுதினமும் செந்தூரம் பாடும்
திரு நெற்றி-

கண்ணுக்குள் போட்டுக் கொள்கிறதே
சந்தன வில்லைகள்-உன்
சீரடி ஒற்றி;

உனக்கு
போஸ்ட் கார்டு போட்டவரை
மோஸ்ட் பொயட் ஆக்கிவிட்டாய்-

இணக்க
தோஸ்துக்கெல்லாம்
வாஸ்துசொல்லி தூக்கிவிட்டாய்.

எந்த இயக்குநருக்கும்
எந்த நடிகருக்கும்
குரல் ததும்ப இசைவானாய்-

சொந்த உறவுக்கும்
வந்த உறவுக்கும்
குரல் அரும்பியானாய் இசை வானாய்.

எத்தனையோ பேருக்கு
சுரம் கொடுத்தாய்
எத்தனையோ பேருக்கு
வரம் கொடுத்தாய்
கரம் கொடுத்தாய்-

அழுது அழுது
நெஞ்செல்லாம்
நஞ்சாகிப்போச்சு-

உமைபெற
தொழுது தொழுது
காற்றுக்கும் நின்னுட்டது மூச்சு.

மிருதங்கம் கொடுக்கும்
ஓசையிடையே மினுமினுக்கும் தங்கமய்யா-

ஸ்ரீரங்கம் சொடுக்கும் சிலுசிலு மொழியோசைத்
காதோரம் தொங்குமய்யா-

இரண்டு தலைமுறை மனசுகளுக்கு
சுளுக்கெடுத்து பேரெடுத்த
இசை வைத்தியர்-
அசைய வைத்தியர்-

எழவாய் விழுந்து
இசைத்தாயின் நெஞ்சுக்குள்
நெருப்பை வைத்தியர்
இருதயத்தை தைத்தியர்.

நீ
இளசுகளோடு
இணக்கமாகும் மோகமயில்-

பெருசுகளுக்கு
மடியில் கொஞ்சும் சோகக்குயில்.

செம்மொழியான தமிழ்மொழியென
நீ துவக்கிய பாடல் ஒலி-
ஏழேழு காலத்துக்கும்
தமிழர் வாழ்வுத் தேடல் விழி.

உம் குரலில்
சென்றனர் அந்தப்புரம்-
வந்தனர் அதற்கு இந்தப்புரம்-
நீயில்லா இந்தக்கொடுமை
சென்று சொல்வேன் எந்தப்புரம்;

பலர்
வரிகளோடு
பதுங்காத வண்ண அரி-

பலர்
வாகைசூடி மகிழச்செய்வதில்
முன்ன வந்த பரி:

தமிழர் இதயக்கடலில்
எந்நாளும் ஓடும்
வெண்கலக்குரல் ஓடம்-

விஞ்ஞான இசைக்குயில்கள்
நாளும் மறவாமல் பாடும்-நீ
ஏழுசுரத்துக்காகும் பாடம்;

Thursday 30 May 2013

ஐந்தறிவாளி


அத்தி மரத்துக்காக
ஆலமரம் கொடிக்கம்பம் ஏற்றாது,


இலவச வீடுகட்ட
நத்தைக்கூடுகள்
இணாம் கேட்காது,



பாலம்கட்டி
பங்கு போடாது
ஒப்பந்தகாரஅணில்,

ரேஷன்கடைப்பொருள்களை
வண்டிகளில் கடத்துவதில்லை
சர்க்கார் எறும்பு,

அழகுநிலைய வாசலில்
பார்க்க முடியாது
குட்டைமயில்களை,

அடிபட்டவனை கணாதது போல
அலுவல் நேரமாயிற்று என்று
விட்டுச்செல்லாது
நேயப்பட்சிகள்,

எதற்கெடுத்தாலும்
கடிதமெழுதி கடிதமெழுதி
காத்திருக்காது
சொந்த சனங்களைக்காக்கும் புலி,

புழுகு வாக்குறுதி தந்து
மெழுகாட்சி நடத்தாது,
கவ்வும் உடும்பு,

செய்வதை செஞ்சிட்டு
எனக்குத்தெரியாமல்
நடந்திருக்குனு நாடகமாடாது
நல்லபாம்பு,

பந்தலிட்டு
தோரணம்கட்டி
சுவரெங்கும் விளம்பர உச்சா போயி,
விழாமேடையில்
ஆபாச நடனம் பார்க்காது கழுதை.

அதிகாரச் சாக்கடைக்கு
கலவரத்தை உண்டாக்கி
குடிசைகளை கொளுத்திக் கொள்வதில்லை
சாதி எருமை
சாதி பண்றி,
                                                   
கருநாகக் கைதுகளுக்கு
கவர்மெண்ட் பொருளைச் சேதமாக்காது
நாகப்படை,

ஆண்டபரம்பரை
அடிமைபரம்பரையினு
பேசி வெட்டிக்கொல்வதில்லை
சிட்டுக்குருவி,

சாதிச்சான்றிதழ் கொடுப்பதில்லை
கம்பெடுத்தான் பள்ளிக்குப் போகும்
ஆடு,

வெள்ளைப்பாலுக்கு
சிலை நூறுகோடி சொல்லிட்டு
வெள்ளைக்காரனுக்கு
பால்விற்பனைனு பேசாது தாய்ப்பசு,

எதிர்த்து பேசுற
ஆள்களோட ஆளை
விலைபேசி இழுக்காது

கழுகு.

Thursday 9 May 2013

ஹைக்கூ

நகைக்கடை ஊழியர் கவலை

அட்சய திருதியில்

பெண் குழந்தை பிறப்பு


அனல் வெயில்

இளைப்பாறும் நிலம்

வயலெங்கும் கருவ மரம்

செதுக்கப்படுகின்றன

மண் சுமந்த மரத்தில்

சிலுவை





வேடன் எறிந்த கல்

போய் விழுந்தது காட்டுக்குள்

காயத்துடன் பறவை.


உண்டியலில் காணிக்கை

புன்னகை பூத்தார்

உலாவந்த கடவுள்.


மல்லாந்து படுக்கும்

வார்த்தைகள் ஏராளம்

தலைப்புகளில் கவிதை


அகத்தினழகு முகத்தில்

சுவற்றுக்குள்

பெய்தமழை நீர்.

        -புதுவை கவிதை வானில்-

         சூன்-2011

Wednesday 8 May 2013

தென்னாப்பிரிக்கா தலைமுறைப்பயணம்-2

இந்தச் செய்தியை காதில் வாங்கி மனதுக்குள்  போடும் போதேஉள்ளுக்குள் ஒரு வரலாறு காலச்சிறகுகளை விரித்துப் பறந்தது, வாசித்துப் பாருங்கள், உங்களுக்கும் அந்த வரலாறு காலச்சிறகை விரிக்கும்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக தென்னாப்பிரிக்காவிலிருந்து திருவண்ணாமலைக்கு வந்திருக்கிறார்கள் புலம் பெயர்க்கப்பட்ட தமிழர்கள்!

புலம் பெயர்க்கப்பட்ட தமிழர்கள்?

ஆமாம் 2013 ஆம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி அதிகாலை தென்னாப்பிரிக்காவிலிருந்து சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கினார்கள், முத்துகிருஷ்ணன் மரிமா ஆகிய இருவரும். தங்களது பரம்பரையே பார்த்திராத கிராமத்தைப் பார்ப்பதற்காக, இங்கே பொங்கல் வைப்பதற்காக, வந்திறங்கிய இருவரின் பின்னணியைச் சொன்னால் இந்த பூமிப் பந்து எவ்வளவு சிறியது என்று நம்மால் யூகிக்க முடியும்.
இவர்களின் வரலாற்றை ஆச்சரியம் நுரைக்க நுரைக்க நம்மிடம் பகிர்ந்து கொண்டார் சென்னை மாங்காடு முத்துக்குமரன் கல்லூரியில் வணிகவியல் உதவிப் பேராசிரியராக இருக்கும் டி.கே.பரணிதரன்.
திருவண்ணாமலை மாவட்டம் மருத்துவாம்பாடி என்னும் சிறு கிராமம் தான் இவரது ஊர், அதிகாலை தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்த முத்துகிருஷ்ணன் மரிமா ஆகியோரின் தாத்தாக்கள் இதே மருத்துவாம்பாடியிலிருந்துதான் தென்னாப்பிரிக்கா போயிருக்கார்கள்.
அதற்கு  கிட்டத்தட்ட 150 வருடங்கள் முன்பு கப்பலில் சென்றவர்கள், தன் தாத்தாக்களின் பூர்வீக மண்ணைத் தேடி விமானத்தில் மீனம்பாக்கம் வந்து இறங்கிய கதை மிக சுவாரஸ்யமானது.
அது 1894...
ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்த இந்தியா பல ஜில்லாக்களாக பிரிக்கப்பட்டு பரிபாலனம் செய்யப்பட்டு வந்தது. அப்போது தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் அடிமைப்படுத்தி வைத்திருந்தனர் ஆங்கிலேயர்.
அங்கே ஏராளமான கரும்புத் தோட்டங்கள், தங்கச் சுரங்கங்கள், நிலக்கரிச் சுரங்கங்கள் இருந்தன.அவற்றில் வேலை செய்ய தென்னாப்பிரிக்காவில் போதுமான மனித சக்தி இல்லை, பிறகென்ன நமக்குத்தான் ஏராளமான அடிமைகள் இந்தியாவில் இருக்கிறார்காளே என்று நினைத்தவர்கள், இந்தியாவிலிருந்து கப்பல் கப்பலாக ஆட்களை ஏற்றி தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பினார்கள்.
அதற்காக ஜில்லா ஜில்லாவாய் போய் கிராமம் கிராமமாய் ஆள் எடுத்தார்கள். அப்படித்தான் திருவண்ணாமலை மாவட்டம் அருகே இருக்கும் மருத்துவாம்பாடி கிராமத்துக்கும் சென்றார்கள் ஆங்கிலேய அதிகாரிகள், அங்கே அப்போது மொத்தம் சுமார் 42 குடும்பத்தினர் இருந்தனர்.
அவர்களிடம் ஆங்கிலேய அதிகாரிகளின் தூதுவரான தமிழர் பேடினார்.
இங்க பாருங்க நம்ம ராஜாங்கத்துக்கு சொந்தமா கடல் கடந்த தேசத்துல நிறைய வேலை இருக்கு. கரும்பு வயல்ல வேலை செய்யனும். கூலி நல்லா கொடுப்பாங்க அது மட்டுமல்ல அஞ்சு வருஷம் கழிச்சு நீங்க எவ்வளவு நிலத்துல வேலை செய்றீங்களோ அந்த நிலத்தை உங்களுக்கே கொடுத்துடுவாங்க இதெல்லாம் எப்போதாவதுதான் வரும்.
அந்த அறிவிப்பைக் கேட்டு மருத்துவாம்பாடி  கிராமத்திலிருந்து 21 குடும்பத்தினர் கப்பலேற முடிவு செய்தனர்.
இந்த ஊர் மட்டுமல்ல இதுபோல தமிழ்நாட்டின் பற்பல ஊர்களில் தண்டோரா போட்டும் மிரட்டியும் ஆங்கிலேயர்கள் ஐம்பதாயிரம் பேரைத் திரட்டினார்கள்.
எல்லோரும் வண்டி வண்டியாக சென்னை செயின் ஜார்ஜ் கோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கே எல்லோரிடமும் கைநாட்டு வாங்கப்பட்டு  துறைமுகத்துக்கு அழைத்துச் சென்று கப்பலில் ஏற்றப்பட்டனர்.
பிறந்து வளர்ந்த தாய் மண்ணை இனி கண்களால் காணமுடியாது என்று தெரிந்தும் கண்களில் தாரை தாரையாய் அழுகைவரிகளை எழுதிக்கொண்டு கப்பல்ஏறினார்கள்.எங்கே போகிறோம்,எந்தத் திசையில் போகிறோம், அங்கே என்ன மொழிப்பேசுவார்கள்? அங்கே என்ன பாடுபடப் போகிறோம்? பல கேள்விக்குறிகளை சுமந்து கொண்டு அந்தக் கப்பல் தென்னாப்பிரிக்காவுக்குப் புறப்பட்டது.
அப்படி மருத்துவாம்பாடியிலிருந்து தன் மனைவி, முருகா,ராஜா என்ற இரண்டு மகன்களை விட்டுவிட்டு பஞ்சம் பிழைப்பதற்காக அந்தக் கப்பலில் ஏறியவர்கள்தான் பச்சமுத்து.
ஆங்கிலேயர்களிடம் அனைவருக்கும் பிடித்தமான ஒரு விஷயம்..... தாங்கள் மீது பிற்காலத்தில் பாதகமான எண்ணத்தை தோற்றுவிக்கும் என்று தெரிந்தாலும் அதை ஆவணங்களாக பதிவு செய்வதுதான்.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் எத்தனை பேரை தென்னாப்பிரிக்காவுக்குக் கூட்டிச் செல்கிறோம்.அவர்கள் ஜில்லா என்ன? ஊர் என்ன?பெயர், சாதி என்று அத்தனை விவரங்களையும் அவர்கள் ஆவணமாக்கி அந்த ஆவணத்தை தென்னாப்பிரிக்காவுக்கும் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
அங்கே கரும்புத் தோட்டங்களிலும் தங்கச் சுரங்கங்களிலும் கூலி அடிமைக்களாக களமிறக்கப்பட்டனர் தமிழர்கள். ஐந்து வருடங்களில் நிலம் சொந்தம் என்று கூறி கூட்டிச் செல்லப்பட்டவர்களில் பலர் ஐந்து வருடங்களில் உயிரோடு இருக்கவில்லை. காரணம் கரும்புத்தோட்ட முதலாளிகளின் சித்திரவதைகள்.

அவர்களில் தப்பிப் பிழைத்த பச்சமுத்துவுக்கு ஆங்கிலேயர்களின் சித்திரவதையைவிட கொடுமையாக இருந்தது தன் மனைவி மகன்களைப் பிரிந்த வலி.ஆயினும் ஊருக்குத் திரும்புகிறோம் என்று கனவிலும் கூட நினைத்துப் பார்க்க முடியாதகாலம்.
அதனால் அங்கேயே இருந்த ஒரு பூர்வீகத தமிழ்ப் பெண்ணைத்திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. இரண்டும் ஆண், மூத்த பையனுக்கு முருகா, சின்ன பையனுக்கு ராஜா என்று தன் முதல் மனைவியின் மகன்களுக்கு வைத்த பெயரையே அவர்களுக்கும் வைத்தார். விதியின் சக்கரத்தில் பூட்டிய வண்டியாய் அவரது வாழ்க்கை ஓடியது.
1910-ம் ஆண்டு மருத்துவாம்பாடி கிராமத்தில் இருக்கும் செயிண்ட் மேரிஸ் பள்ளியின் ஆசிரியர், அந்த ஊரிலிருந்து தென்னாப்பிரிக்கவுக்குப் போன பச்சமுத்துவுக்குக் கடிதம் எழுதுகிறார்.அப்போது அவரது பையனிடமும், உங்கப்பாவுக்கு ஏதாவது எழுதனும்னா இந்தா எழுது என்று சொல்லியிருக்கிறார்.
முருகா தன் அப்பா பச்சமுத்துவுக்கு அந்தக் கடிதத்தில் எழுதியிருக்கிறான்...
தேவரீர் அப்பாவுக்கு எங்களை அனாதையாக விட்டுவிட்டுப் போய்விட்டீர்களே நாங்கள் அனாதை என்று கருதி ஆசிரியர்தான் புத்தகங்கள் இலவசமாகத் தருகிறார் என்று உருகியிருந்தான் அந்தச் சிறுவன். இதுபோல பல கடிதங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன.
1910-ல் முருகா எழுதிய அந்தக் கடிதங்கள்தான், நூற்று மூன்றாவது வருடம் அந்த பரம்பரையின் மிச்சங்கள் தங்கள் சொந்த ஊருக்கு வர உதவியிருக்கிறது.
பச்சமுத்து வயதாகிப் போய் தென்னாப்பிரிக்காவிலேயே இறந்துவிட அவரது மகன் எழுதிய கடிதங்களை அவரது வாரிசுகளும், இதே கிராமத்திலிருந்து போனவர்களின் வாரிசுகளும் ஒரு பூஜைப் பொருள் போல பாதுகாத்து வந்தனர்.
சில வருடங்களாகவே பச்சமுத்துவின் பேரன் முத்துகிருஷ்ணன் தன் தாத்தாவுக்கு எழுதப்பட்ட கடிதங்களை அடிக்கடி பார்த்தபடி இருந்திருக்கிறார். அந்தக் கடிதத்தில் மருத்துவாம்பாடி முகவரி தெளிவாக இருந்திருக்கிறது.
தன் தாத்தாவின் ஊர் எங்கே இருக்கிறது என்றே தெரியாமல் தென்னாப்பிரிக்காவில் பெயரில் மட்டும் தமிழுடன் வாழ்ந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களில் முத்துக்கிருஷ்ணனும் ஒருவர். அவருக்கு தமிழ் அவ்வளவாக பேசத் தெரியாது, எழுதத் தெரியாது ஆனால் பெயர் முத்துக்கிருஷ்ணன் எல்லாமே ஆங்கிலமும் தென்னாப்பிரிக்க மொழியும்தான் நூறாண்டுகளாக தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த பரம்பரையாயிற்றே.
தன் தாத்தாவுக்கு அவரது சொந்த ஊரிலிருந்து வந்த கடிதத்தில் இருந்த அந்த முகவரியை ஆங்கிலத்தில் கூகுளில் டைப் செய்து தேடியிருக்கிறார். கூகுள் மேப் மூலம் அது எங்கிருக்கிறது என்று தேடியிருக்கிறார். அப்படித்தான் மருத்துவாம்பாடியைக் கண்டுபிடித்திருக்கிறார்.
அட அடுத்த சில நாட்களில் அதாவது கடந்த வருடம் பிப்ரவரி மாதம் சென்னைக்கு விமானம் பிடித்து வந்திறங்கி, டாக்ஸி பிடித்து திருவண்ணாமலை போய் பல பேரிடம் கேட்டுக் கேட்டு மருத்துவாம்பாடி சென்றுவிட்டார்.
அவருக்குத் தமிழ்த் தெரியவில்லை அவர் பார்த்த கிராமத்தினருக்கு ஆங்கிலம் தெரியவில்லை. ”இதுதான் என் சொந்த ஊர்” என்று அந்தத் தமிழ் பேச முடியாத தமிழனின் மனம் ஆனந்தக் கூத்தாடியது.ஆனால் தன் தாத்தா, அவர் அப்பா யார் என்று தனது தாய் மண்ணை மிதித்தும் விபரம் கிடைக்கவில்லை அவருக்கு. ஊரில் பலரிடமும் தனது விசிட்டிங் கார்டைக் கொடுத்து ஆங்கிலத்தில் தன்னை தொடர்புகொள்ளுமாறு சொல்லிவிட்டுக் கண்ணீரோடு சென்றுவிட்டார்.
இந்த நிலையில்தான்.. மாங்காட்டில் கல்லூரிப் பேராசியராக இருக்கும் பரணிதரன் தன் சொந்த ஊருக்கு விடுமுறைக்காகப் போக ஊர்ப் பெரியவர்கள், முத்துக்கிருஷ்ணனின் விசிட்டிங் கார்டைக் கொடுத்து அவர் வந்து போனதைச் சொல்லியிருக்கிறார்கள்.
அதற்கு அடுத்து பரணிதரனுக்கும்,முத்துக்கிருஷ்ணனுக்கும் இடையே நடந்த பரஸ்பர இ மெயில் உரையாடல்களில்தான் இந்த நூற்றைம்பது வருட பாரம்பரியம் மீட்டெடுக்கப் பட்டிருக்கிறது.
அதன் கிளைமாக்ஸாகத்தான் நூற்றைம்பது வருடங்களுக்கு முன் தன் தாத்தா கொத்தடிமையாக புறப்பட்ட தனது சொந்தக்கிராமத்துக்கு பொங்கல் கொண்டாட தனது மனைவி மரிமாவோடு வந்திருக்கிறார் முத்துக்கிருஷ்ணன். மாரியம்மா என்றுதான் பெயர் வைத்திருக்கிறார்கள். அதுதான் மரிமா என்று மருவிவிட்டதாம்!
இவர்களை மருத்துவாம்பாடி கிராமமே கண்ணீரோடும் பெருமிதத்தோடும் காத்திருந்து வரவேற்றிருக்கிறது!
அட கொத்தடிமையாக ஏற்றி அனுப்பப்பட்ட ஐம்பதாயிரம் தமிழர்களில் இப்போது ஓரிருவர்தாம் தாய் மண்ணைத் தேடிக் கண்டுபிடித்து முத்தம் கொடுத்து பக்கத்திலிருக்கும் வேட்டவலம் அம்மனுக்குப் பொங்கலிடுகின்றனர். மிச்சமிருக்கும் தமிழர்கள் உலகின் எங்கெங்கோ என்னென்னவோ மொழி பேசிக்கொண்டே இருக்கிறார்கள்!.
ஒவ்வொரு தமிழனும் தன் பாரம்பரியத்தைத் தேடிச் செல்ல முத்துக்கிருஷ்ணனும் மரிமாவும் கண்முன் நிற்கும் உதாரணம்!
வாருங்கள் சொந்தங்களே, உங்களைத் தமிழ்நாடு வரலாற்றுத் தழும்போடு வரவேற்கிறது.
                                     -நன்றி:தமிழக அரசியல்-  
                                      09-01-2013

Tuesday 7 May 2013

தென்னாப்பிரிக்காவிலிருந்து தலைமுறைப்பயணம்






                  பிறந்த மண்ணை விட்டு பிழைப்புக்காக வேறு நாட்டுக்கு செல்பவர்கள் அங்கு சென்றபின் அங்குள்ள வாழ்க்கை முறை, உழைப்பு போன்றவை படிப்படியாக தாய்மண்ணை, உறவினர்களை இந்த வேகாமான யுகத்தில் மறக்க வைத்துவிடுகிறது. ஆனால், கடல் கடந்து, கண்டம் விட்டு கண்டம் போய் மூன்று தலைமுறைகளை கடந்து, மொழியை மறந்த தமிழ் குடும்பம் ஒன்று தன் முன்னோர்கள் பிறந்த பூர்வீக வேர்களை தேடி தென்னாப்பிரிக்காவில் இருந்து தமிழகத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் தன் உறவுகளை கண்டறிந்ததோடு அவர்களோடு பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் மருத்துவாம்பாடி கிராமமே உறவுகளை தேடி வரும் குடும்பத்தை வரவேற்க உற்சாகமாக காத்திருந்தார்கள். காரில் இருந்து 60 வயது முத்துகிருஷ்ணன் 55 வயது மாரியம்மா மாரியம்மாவின் பாட்டி 70 வயது மீனாட்சியம்மாள் இறங்கியதும்மே வானவேடிக்கை வெடித்து மேளதாளம் முழங்க இளைஞர்கள் மாலைகள் சூட்ட குழந்தைகள் ரோஜாப்பூக்களை தர பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்ற அன்பை கண்டு உணர்ச்சி வசப்பட்டு அழுதுவிட்டனர். கிராம மக்கள் பேசிய தமிழ் அவர்களுக்கு புரியவில்லை. அவர்கள் பேசிய ஆங்கிலம் இவர்களுக்கு புரியவில்லை. மீனாட்சியம்மாள் மட்டும் சிலச்சில தமிழ் வார்த்தைகளில் பேச எல்லோருக்கும் சந்தோஷமாகி கைதட்டி மகிழ்ந்தனர். கிராமத்தில் இருந்த கோயில்களுக்கு நடக்க வைத்து அழைத்து சென்றனர். அப்போது முத்துகிருஷ்ணன் இந்த தெருவுல எங்க தாத்தா விளையாடியிருப்பாரு தானே என உதவிக்கு இருந்த பேராசிரியர் பரணீதரனிடம் கேட்க அவர் ஆமாம் என தலையாட்டியதும் உணர்ச்சி வசப்பட்டு தரையை தொட்டு வணங்கினார். கோயிலுக்கு சென்றனர். கோயில் உள்ளே நுழைந்ததும் இது எங்க தாத்தா வணங்கன கோயிலா எனகேட்டு வணங்கினார்.

முன்னால் இராணுவ வீரரான இராமச்சந்திரன் எங்க கொள்ளு தாத்தாவோட அத்தை பையன் பச்சமுத்து அவர்க்கு கல்யாணம் செய்து வச்சியிருக்காங்க. அவருக்கு பூவாசை இராஜமாணிக்கம்ன்னு இரண்டு பசங்க. இங்க அப்ப வறுமை அதிகமாக இருந்ததால ரொம்ப கஸ்டப்பட்டாறாம். அந்த நேரம் நம்ம நாட்ட ஆண்ட வெள்ளைக்காரங்க பினாங்கு, மலேசியா, தென்ஆப்ரிக்கா நாடுகளுக்கு வேலைக்கு அழைச்சிம் போயிருக்காங்க. வறுமையில இருந்தாலும் திடகாத்திரமா இருந்த பச்சமுத்து கப்பல்ல 1890ல தென்னாப்பிரிக்காவுக்கு வேலைக்கு போயிருக்காரு. அப்படி போனவர் திரும்பி வரக்காணோம். அவரைப்பத்தி எந்த தகவலையும் காணோம். அவரோட குடும்பம் இங்க ரொம்ப கஸ்டப்பட்டாங்கன்னு எங்க தாத்தா எங்கப்பாக்கிட்ட சொல்லியிருக்காரு. அத எங்கப்பா என்கிட்ட சொன்னாரு. நான் இத எம்புள்ளைங்களுக்கிட்ட சொல்லி வச்சியிருந்தன். இப்ப திடீர்ன்னு ஒரு குடும்பம் நாங்க தான் உங்க சொந்தம்ன்னு வந்து நிக்கறாங்க. தென்னாப்பிரிக்காவுக்கு போன பச்சமுத்து அங்கப்போய் முனுசிங்கற தமிழ் பெண்ண கல்யாணம் செய்துக்கிட்டாராம். அங்க அவருக்கு இரண்டு பசங்க பிறந்துயிருக்காங்க. அவுங்களுக்கு முருகா ராஜான்னு பேர் வச்சியிருக்காரு. அதல ராஜன் பையன் முத்துகிருஷ்ணன் தன்னோட மனைவியோட தென்னாப்பிரிக்காவுலயிருந்து உறவுக்காரங்களை தேடி வர்றதா எங்க ஊர் பேராசிரியர் பரணிதரன் சொன்னாரு அவுங்கள பாத்தது ரொம்ப சந்தோஷமாயிருக்கு என நெகிழ்ந்தவர்

சென்னையில் தனியார் கல்லூரி வணிகவியல் பேராசிரியர் பரணிதரன் நம்மிடம், முத்துகிருஷ்ணன் தென்னாப்பிரிக்காவுல ஈஸ்ட் வெஸ்ட் புரோவின் அரசாங்கத்தின் ஆடிட்டராகவும் அவரோட மனைவி மாரியம்மா தென்னாப்பிரிக்கா தேசிய வங்கியின் நிர்வாக மேலாளராக இருக்காங்க. ஒரு வருஷத்துக்கு முன்ன இங்க வந்து அவரோட தாத்தா பெயரை சொல்லி விசாரிச்சியிருக்காரு. மொழி பிரச்சனையால கண்டறிய முடியல. போகும்போது விசிட்டிங் கார்டு தந்துட்டு போயிருக்காரு. அத எங்கிட்ட தந்தாங்க. நான் மெயில் மூலமா இவரை தொடர்பு கொண்டு பேசனன். எங்க ஊர்லயிருந்து அவரோட தாத்தாவுக்கு 1910ல நிறைய கடிதங்கள் போயிருக்கு. அத ஸ்கேன் பண்ணி அனுப்பனாரு. அதலயிருந்த எங்க ஊர் ஆர்.சி ஸ்கூல் தலைமையாசிரியர் பெயரை வச்சி பெரியவங்ககிட்ட விசாரிச்சப்ப 120 வருஷத்துக்கு முன்னாடி நிறையப்பேர் வறுமையால கப்பல்ல போனதா சொன்னாங்க. அதப்பத்தின தகவல்களை தேடனப்ப கப்பல் முகவரி கிடைச்சது. அதன் மூலமா பயணம் செய்தவங்க பட்டியலை வாங்கனன். அதல எங்க மருத்துவாம்பாடி கிராமத்தலயிருந்து மட்டும் 42 பேர் தென்னாப்பிரிக்காவுக்கு கரும்புவெட்ட சுரங்கம் தோண்ட போனது தெரிந்தது. இந்தியாவுலயிருந்து 50 ஆயிரம் பேர் அந்த காலகட்டத்தல போயிருக்காங்க. அதல முத்துகிருஷ்ணன் தாத்தா பெயரை வச்சி ஊர்ல விசாரிச்சி அவுங்க உறவுக்காரங்க யாருங்கறத கண்டுபிடிச்சி சொன்னன். அவுங்க சந்தோஷமாகி சந்திக்க வந்துயிருக்காங்க இது ரொம்ப சந்தோஷமாயிருக்கு என்றார்.

தென்னாப்பிரிக்கா தமிழர் முத்துகிருஷ்ணன் நம்மிடம் எங்க தாத்தாவுக்கு தமிழக உறவுகளிடம்மிருந்து வந்த கடிதங்களை பொக்கிஷமா பாதுகாத்துயிருக்காரு. எங்கப்பா அத கடவுளா நினைச்சி வணங்கனாரு. எங்க தாத்தாவுக்கு வந்த கடிதத்தல இருந்த வடாற்காடு ஜில்லா, மருத்துவாம்பாடிங்கற கிராமத்து பெயரை வச்சி கூகுள்ள தேடி கண்டுபிடிச்சி 2011ல இங்க நான் மட்டும் வந்து விசாரிச்சன். யாருக்கும் அதப்பத்தி தெரியல திரும்பி போயிட்டன். பிறகு என்னை பேராசிரியர் பரணீதரன் தொடர்பு கொண்டாரு. என் உறவுக்காரங்க யாருங்கறத கண்டுபிடிச்சி சொன்னாரு. இப்ப அவுங்கள பாத்துட்டன் என் உணர்ச்சிய வார்த்தையால சொல்ல முடியல அந்தளவுக்கு ஆனந்தமாயிருக்கன் என்றார். கிராமத்து மக்களின் அன்பை கண்டு மாரியம்மா பேச முடியாமல் கண் கலங்கியபடியே இருந்தார். மீனாட்சியம்மாள் அறைகுறை தமிழில் நம்மிடம், சொந்தக்காரங்களை பாத்ததுக்கப்பறம் மனசு சந்தோஷமா, தெம்பாயிருக்கு என்றார்.

புகுந்த வீட்டு குல தெய்வம் வேட்டவலம் பூவாத்தம்மன் என உறவுக்காரர்கள் சொல்ல அங்கு சென்று தை பொங்கல் வைத்து கொண்டாடினார்கள் முத்துகிருஷ்ணன் தம்பதியினர். அதற்கடுத்து மாரியம்மாவின் முன்னோர்கள் பூர்வீகம் வேலூர் மாவட்டம் திமிறி பக்கத்தில் உள்ள தட்டாஞ்சாடி என்பதை கண்டுபிடித்து அங்கு சென்று உறவினர்களை பெரும் முயற்சிக்கு பின் தேடி நன்காம் தலைமுறை உறவினர்களோடு விருந்துண்டுள்ளனர். மீனாட்சியம்மாவின் பூர்வீகம் திருவண்ணாமலை அருகேயுள்ள வெறையூர் கிராமம். அவர்களின் உறவினர்களை கண்டறியமுடியவில்லை. அதேபோல் பச்சமுத்துவின் முதல் மனைவியின் பிள்ளைகள் கர்நாடகா மாநிலம் ஷிமோகாவில் குடியேறியுள்ளனர். அவர்களது வாரிசுகளை சந்திக்க ஷிமோகா சென்ற முத்துகிருஷ்ணன் குடும்பத்தார் தன் தாத்தாவின் முதல் மனைவியின் பேர பிள்ளைகள், அவர்களது பிள்ளைகளை கண்டு ஆனந்தமடைந்துள்ளனர்.

தென்னாப்பிரிக்காவில் வாழும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தங்களது பூர்வீகம் தமிழகம் என்பதை மட்டும் அறிந்து வைத்துள்ளனறாம். சொந்தவூர் உறவுக்காரர்கள் முன்னோர்கள் யார் என்பதை அறியாமல் உள்ளார்களாம். தென்னாப்பிரிக்கா தமிழ் சங்கத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள அவர்களது ஊர் உறவினர்களை கண்டறிந்து தரும் முயற்சியை எடுக்க போவதாக கூறியுள்ளார் இந்த தமிழர்.

           -நன்றி:நக்கீரன் நந்தவனம்-


Monday 6 May 2013

கூரிய மொழி

சின்ன வயதிலிருந்து
பார்த்து வருகிறேன்
இரவு சாப்பாடு போட்டு தூங்கிற வரை
அமைதியாக இருக்கும் வீடு
திடீரென அம்மாவின் அழுகைக்குரல் கேட்கும்
ஏதேதோ காரணத்தால் விழும் அடி
அப்போது ஒன்றுமே புரியாது
முந்தானை பிடித்து அம்மாவோடு
ஒதுங்கிய சிலகாலம்
அப்பாவை பிடிக்காமல் போகும்
சில கால இடைவெளியில் அன்னியோன்யம்
நெருங்கிப் பயணிக்கும் இருவருக்கும்
சில காலம் துடுப்பற்ற ஓடமாய் கரையொதுங்கி
தவிப்பாள் என்னோடு
எத்தனை வலிகள்
எத்தனை அவமானம் சுமந்தவள்
ஒரு பொதும் மறுத்துப் பேசியதில்லை
தனியார் நிறுவனமொன்றில் வேலைபார்த்து
ஊர் திரும்பிய பின்னோரு நாள்
கண்முன்னே பளாரென்று அம்மாவின் கன்னத்தில்
அப்பாவின் ஆதிக்க கோபம்
முதல் தடவையாக‌
மறுத்துக் கூறிய மொழி
வளர்ந்த பிள்ளைகள் முன்
அடி வாங்குவது நல்லாவாயிருக்கும்.

அப்பா சுட்டி

ஆறேழு வருசமிருக்கும்
ரெண்டு குடும்பமும் பேசி
அம்மாவுக்கும் அத்தைக்கும்
குழாயடியில் சின்ன பேச்சு முற்றி
பெரிய சண்டையாகி குடும்பம் பிரிஞ்சி போச்சு
பல வருடங்கழித்து சித்தி மகள் கலியாண‌த்துக்கு
கையில் குழந்தயொடு வந்த அக்காவை
எதிரெதிர் அமர்ந்து
ஊமைச்சந்திப்போடு இருக்கையில்
அக்கா மகனைப்பார்த்த அம்மா
காதருகே வந்து மெல்ல சொல்வாள்
அப்பா மாதிரியே இருக்கானே என்று,
திருமணம் முடிந்து ஊர்திரும்பியதும்
வெறிச்சோடிய கல்யாணமண்டபமாய்
அவ்வப்பொது நெஞ்சிலொரு வெறுமை படரும்
சந்தித்து எதுவும் பேசமுடியாத பொழுதெண்ணி,
வழியெங்கும் வெவ்வெறு குழந்தைகளை பார்க்கிறபோதெல்லாம்
இப்பாடியே கூற ஆரம்பித்தாள் அம்மா
மாசிக்களரிக் கொடைக்கு வந்த பேரன்
யாருமற்ற தெருவில்
அம்மாவைப்பார்த்து ஆச்சியென்றதில்
பழையதை நினைத்து
பொலபொலவென்று அழுது தூக்கி கொஞ்சினாள்
வீட்டுக்கழைத்து மாலைமாட்டப்பட்ட
அப்பா புகைப்படத்தைக்காட்டி
இது யாரென்றவளின் இத‌யம் பதில்கேட்கத் துடிதுடித்தடங்கியது
க‌ழுத்தறுக்கப்பட்ட கோழியைப் போல‌
அம்மாவுக்குத் தெரியாமல்
அப்பா கொடுத்த தங்கத்தாயத்தை பிடித்துக்காட்டினான்
அப்பாச் சுட்டி.

ஒரு கணமாகிய பொழுது




உரைகளற்ற மவுனம் வியாபிக்கும் குளம்
காலில் மெல்ல மெல்ல
அலை தழுவி தழுவி செல்லும் பிரியம்
இருக்கும் மூன்று வேட்டி
ஒரு பனியன் துவைக்க‌
ரெண்டு கத தூரம்வரவேண்டியிருக்கென
மனசுக்குள் பேசிய படியே
ஓங்கி ஓங்கி
துவைகல்லில் விழுகிறது சப்தம்
அரைநிர்வாணத்தோடு
மடித்துக்கட்டிய கைலி முடிச்சு அவிழாமல்
தெரு வழியாக வீடடைந்து
அலசிய துணிகள கொடியில் வைத்து
ஒவ்வொன்னா விரிக்க எத்த‌னிக்கயில்
பொத்தென்று புழுதியில் விழுந்த வேட்டியெடுத்து
உதறுகையில் அடச்சே என்ற சொல்லில்
உலக இன்பமே
ஒரு கணம் இருளாகித்தான் போகிறது

போதிக்கப்பட்ட அவஸ்தை

ஒடித்திரிந்த கால்களில்
அம்மாவின் முக்காலி உருட்டலும்
அப்பாவின் யானை அம்பாரியும்
வாகனத்தின் ஒவ்வொரு துகளிலும் கலந்து
தெருக்களும் தேகத்தில் சுமந்திருக்கிறது,
வேதனைக் காலங்களென்று
மறுதலித்த பழக்கவழக்கத்தை
சுகவாசியான போது
கடைபிடித்த கடையனாகி,
அல்லோலப்பட்ட மனசு
தூரத்து இடிமுழக்கம் கேட்டு
விழுந்த சாகும் வெள்ளாடாய்,
தொழில் நிமித்தம்
பெத்தவங்களைப் பிரியும் பட்டண வாழ்வும்
பரிதாபம் சம்பாதிக்கிறது,
இந்த முழுமையற்ற வாழ்வில்
இழந்த கணங்கள் பெற்ற பொழுதைக்காட்டிலும் அதிகம்
திடீர் சாவில் கலந்து
திருமண‌த்தில் இருந்திருக்க முடியாது
உற‌வுகளின் நீட்சி
விழாக்களின் தொடர்பில் வாழ்கிறது
இது போதிக்கப்பட்ட அவஸ்தை
நாளுக்கு நாள்
நெஞ்சுக்குள் ஆசைப்புற்று போல் வளர்கிறது.
 

உடைபடாத பொழுது

உற்சாகக் காலைப்பொழுது
தடதடத்துக் கடக்கும்
அலுவலக ஆவல் நிறைந்த ரயில் பயணம்
ஒரு மதில் சுவரில்
தூக்கி வீசப்பட்ட முகக்கண்ணாடி
நொறுங்கியிருந்தது,
இவ்வளவு காலம் பழக்கப்பட்டதை
எவ்வளவு எளிதில் தூக்கி வீசினார்களென
மனம் யோசிப்பில் புதைந்தது
அந்தக் கண்ணாடி
எப்படி உடைந்திருக்குமென்று,
குழந்தை கையில் கொடுத்து விட்டு
சமையல் கட்டு பக்கம் அம்மா போயிருப்பாளோ?
நாள் பட்ட ஆணியில் மாட்டிய
நூலருந்து விழுந்திருக்குமோ?
வேலைக்குப் போகும் அவசரத்தில்
கொளுக்கியில் மாட்டாமல் அக்கா போயிருப்பாளோ?
கல்லூரிப்பேருந்துக் கட்டணம்கேட்டு
அண்ணன் எட்டி உதைத்திருப்பானோ?
பால் குடிக்க வந்த பூனை தட்டிவிட்டதோவென
நினைவுகள் வெவ்வேறு
கோணங்களில் ஓடின
அலுவலகம் போகும் வரை,
பணிமுடித்து திரும்புகையில்
அந்தக் கண்னாடிச் சட்டகத்தை
கழற்றிய படியிருந்தார் ஒருவர்,
உடைபட்டு போகிற
நம் ஒவ்வொரு பொழுதும்
உடைபடாத ஒரு புதுப் பொழுதை
கையில் தந்துவிட்டுதான்போகிறதென
ரயிலில் இருவர் பேசிக்கொண்டிருந்தது
அதெவ்வளவு பொருத்தமானதென்று
காதில் விழுந்தது
ரயிலின் சத்தத்தைக் கடந்து.

பயணமாகும் மனசு

ஒரு வயதுக்கு வந்த பகலை
குமரச் சூரியன் பார்க்க வந்த
வைகறை நேரம்,
மிச்சத்தூக்கத்தை ரயிலில் தூங்கலாமெனச் சென்று
தூங்காதவொரு நாள்
தண்டவாளத்துக்கு நெருக்கமாய்
அடுக்கக வீட்டுப் பின்புறம்
மேய்ந்து திரியும் கோழி
குழி பறித்துத் தூங்குகிற நாய்
அழுகியதால் தூக்கியெறியப்பட்ட இடத்தில்
புது ஜீவனோடு சில தக்காளிச் செடி
ஒன்றிரண்டு மங்கன்று
கூட்டமாய் பப்பாளிச் செடி
முளைத்திருந்ததின் அருகில்
ஒரிரு தினங்களுக்கு முன்
எறியப்பட்ட கண்ணாடி
தனக்குள் ஆழப்பதிந்த முகங்களோடு
தனக்குள் ஆழப்பதியாத சில முகங்களையும்
சேர்த்துக் காட்டியது
பயணமாகும் உடைந்த மனசுகளுக்கு
ஆறுதலாய் தினமும்.

சாயங்கால ராகங்கள்

வயப்படாத காலத்தின்
ஆசைகள் மீட்டிய
புத்தம் புதிய சாயங்கால ராகம்,

வருகை தரும்
அனைவர் விரல்களையும்
தொட்டுக்கொள்ளும்
கற்கண்டுத் துண்டுகள்

வரவேற்பு வாசலோரத்தில்
எச்சங்களையும்
துடைத்துப் போட்ட கைரேகைகளையும்
திண்ணும் குப்பைத் தொட்டி

நீர் அலம்பிய முகத்தைப்
பார்த்துக்கொள்ளும்
கழிவறைக்கண்ணாடி

அந்தக் கூட்டத்தில்
அரங்கு நிறைய
நிரம்பியிருந்தன கண்கள்

அங்கு இருக்கைகளில் உட்கார்ந்திருந்தன
ஆளுமைகளோடு
சரிசமமாக சாதனைகள்

தொகுப்பாளினியின்
நாக்கில் ஒட்டிக்கொண்டன
சொற்கள்

விழிகளை மறைத்துக் கொடுத்த
பொக்கைகளில் ஒளிந்திருந்தன
ஏதோ ஒன்றுகள்,

நமட்டுச் சிரிப்புக்கு
பல்லிளித்தவாறு
புகைப்படக் கருவிகள்

செவிப்பறையில்
செய்திகள்
குளிரூட்டப்பட்டது

வயோதிகளை
அழைத்து வந்த ஊன்றுகோல்கள்
படுக்கக் கிடந்தது
விறைப்பாய் தரையில்,

பின்னிருக்கையில்
குசுகுசு பேச்சூறுகள்

இடையிடையே
குறுக்கும் நெடுக்குமாய்
எழுந்து செல்லும் அவசரம்,

காலந்தோறும் சுமந்து
கொண்டுதானிருக்கின்றன
கலைந்து போன பின் இருக்கும்
அரங்க வெறுமையும்
அடுத்த கூட்டத்துக்கான
வருகையும்.

ரயில்முகப் பயணம்

தண்டவாளம் அருகில்
ஒரு சுற்றுச் சுவரோரம்
சாத்தி வைக்கப்பட்டிருந்தது
உடை பட்ட கண்ணாடி ஒன்று,
தினமும் காலையில் வேலைக்குச் செல்கிறேன்
ஒரு முகத்தைக் காட்டியது-
மாலையில் திரும்புகிறேன்
வேறொரு முகம் காட்டியது-
உற்றுப்பார்க்கிறேன்
பெரிய முகத்தைக் காட்டியது-
சற்று விலகிப் பார்க்கிறேன்
எதிரிலுள்ள மரத்தைக்காட்டியது-
வளைவு கடந்து திரும்பிய போது
இன்னொரு முகத்தைக் காட்டியது-
வெகுதூரம் கடந்து வந்து விட்டபிறகும்
இப்போதும் நினைக்கிறேன்
அப்போதும் ஒரு புதிய முகத்தைக்காட்டியது-
அது வீட்டுக்குளிருந்த பொழுது
ஆசை ஆசையாய்
அம்மாவின் வியர்வை முகம்,
அப்பாவின் ஆவேச முகம்,
தம்பியின் மழலை முகம்,
பாட்டியின் சுருக்கு முகம்,
தாத்தாவின் பொக்கை முகமென
இப்படி எத்தனையெத்தனை
முகங்களைப் பார்த்த கண்ணாடி
எனக்குள் எதை எதையோ
கதை கதையாய் சொன்னவாறே இருந்தது
ஒவ்வொரு பொழுதும் அவ்வழியாக
ரயிலில் கடக்கிற பொழுது
 
முகவை-15

துளிப்பூக்கள்

சுடரில்லா விளக்கு
எரிகிறது
ஞானியின் உள்ளம்.

நிர்வாணக்கட்டடம்
ஆடை நெய்கிறது
சுவற்றில் பூச்சி.

                      -நன்றி: பொதிகை மின்னல்-
                      ஜூலை 2011

இன்னும்

சுதந்திரப் போராட்ட வீரர்கள்
சாலைகளில்-
சந்துத் தெருக்களில்
எங்களுக்காக
போராடிக்  கொண்டிருக்கிறார்கள்
ஜாதிச் சங்கப் பலகைகளில்
இன்னும் தீரத்துடன்.

                           -நன்றி:உண்மை-
                            ஆகஸ்ட் 1-15-2011

கோபம்

குழந்தை
சூப்பும் விரலை
எடுத்து விடும்
பொழுது
கோபத்தோடு
அழுகிறார்
கடவுள்.
   
                   -நன்றி:குமுதம்-
                   4-4-2012

மீசை முறுக்கிய காடு

சில காலம்
நிலவரங்களைத்தேடி
அலையும்
அந்தக் காடு
அமைதியின் மூர்க்கத்தை
அடக்கி-
பிடரி மயிற்றை இழுத்து
பின்னங்கால் தெரிக்க
சுற்றுகின்றன-
அவசரத்தின் படபடப்புகள்
மட்டும்.
நெஞ்சின் தீராத பக்கமெங்கும்
தேடித் தேடியே கனக்கிறது-
அது
சந்தன லாரிகளும்
காக்கி சாக்சுகளும் இளைப்பாற
நிலவரங்களைத் தேடி
அலையும் அந்தக் காடு.
சோகத்தின் அனலை
வீசிய படியே-
பேசிக் கொண்டிருக்கும்
காட்டின் எண்ண்ம் எதுவாக இருக்கும்?
வெடிச் சத்தம் கேட்டு
வெல வெலத்துப் போன வனதேவதை
வாய்தாவில் கூட
வெளி வரமுடியாது-
மிருக மனிதர்களின்
துப்பாக்கி ஏந்திய பார்வையொடு
நீள்கிறது-
சில காலம்
மீசை முறுக்கிய
அந்தக் காடு.

                                  -நன்றி:ஆனந்தவிகடன்
                                   17-08-2011
 

பகைத்திறம் தெரிதல்

இருளைக் கவ்வும்
அந்திமாலைப் பொழுதில்
சகதிகளுடன் சஞ்சலத்தில்
சாய் கோபுரமாய் மருத நில வேந்தன்,

இதயக்குரல்கள் விம்ம விம்ம
அவனின் உழவுப் பாட்டு
ஊர்வலம் போகிறது
காற்றில் ஆகாய மார்க்கமாக,

ஏகாந்த வேளையில்
ஏற்றப் பாட்டிற்குத்
தலையசைக்கும் நாத்துப் பயிர்கள்;

கட்டடங்களால் காய்ந்து
போய் கொண்டிருக்கினறன
எம் முப்பாட்டன் வெட்டிய
ஏரிகளும் ஆறுகளும்
வீட்டு மனைகளாக.

நாகரிகம் தந்தவர்கள்
சாப்பாட்டுக்கு வழியின்றி
உழவை மறந்த எடுபிடிகளாய்.

ஊருக்குச் சோறு போட்டவன்
மக்கள் மண் மரம் செடி
பறவை விலங்கொடு வாழ்ந்தவன்
நினைவு தாளாது
கூண்டுக்குள் பறவையையும்
தொட்டியில் செடிகளையும்
வளர்த்து மகிழ்கிற
மருத நிலவகையறாக்கள்.

நாத்து நட்டு களையெடுத்துப்
பயிர் வளர்த்த வரப்போரத்தில் ஒருத்தி
வரப்போகும் வறுமையைச் சுமந்து உழத்தி.

மருத நிலத்தைப் போலவே
கரையோரம்
ஒதுங்கிக் கிடக்கின்றன
மணல் லாரிகள்
அருகே வற்றிய நதி.

                          -நன்றி:பச்சையப்பன் ஆண்டுமலர்-
                          2011-2012

பட்டணத்து பாப்பா

ஊரைவிட்டு
ஓடி வந்து
குறைஞ்சது  முப்பது வருஷமாகும்
பட்டணத்திலே
கல்யாணமும் பண்ணி
குழந்தையும் பெற்றாயிற்று
குறைஞ்ச சம்பளத்தில் தொடங்கி
கை நிறைய சம்பாதித்து
ஆங்கிலோ இண்டியன் பள்ளியில்
படிக்கிறது குழந்தைகள் ரெண்டும்
ஊர் பக்கமே போகக்கூடாதுன்னு
வைராக்கியம் மட்டும்
வளைத்து போட்டு விட்டது
பட்டணத்தில்.
இன்னும் கொஞ்ச நேரத்தில்
ப்ள்ளி முடிந்து வரும்
குழந்தைகளுக்காக வாசலில்
பைக்கோடு வெளியே நிற்கிற போது
சாலையில்,
ஏரு பூட்டி உழுகும் அப்பாவும்,
உரல் குத்தும் அம்மாவும்,
கோலம் போடும் தங்கையும்
அவ்வப்போது ஞாபகத்தில் வரும்,
பைக்கிலேறிக் கொண்டு
போகலாம் அப்பா வீட்டுக்குன்னு
பிள்ளைகள் சொல்கையில்
ஹெல்மட்டுக்குள் கண்ணீரோடி
மீசை நனைத்து நிற்கும்,
உப்புக்கரித்தது
இவ்வளவு காலம் வாழ்ந்த
அந்த வாழ்க்கை.
                                              -நன்றி:கணையாழி-
                                              மே-2012

ஞாபகக்குடை

எண்பது காலகட்டம்
ஊரெல்லாம் ஒரே கலவர கூச்சல்
சாலை மறிக்க
ரோட்டோர மரத்தை வெட்டயில்
முறிந்தது கோடாரி-
அன்றிலிருந்து சாமிமரமென பேரெடுத்தது ஊரில்
பத்து வருசப் பஞ்சத்த போக்க
அடைமழை பேஞ்சது,
மாயாண்டிக்கு ரெட்டபுள்ள போறந்தது,
மூக்கம்மா வயசுக்கு வந்தது,
சங்கிலியும் சாத்தாயும் கூட்டிட்டு ஓடியது,
பினாங்கு போன உடையான்
மீசையோட வந்ததென
அந்த வருடத்தை
ஞாபக்குடை பிடித்து
கம்பீரமாய் நின்ற அந்த ஒடை மரம்
முந்தா நாள் பேஞ்ச மழைக்காத்தில்
வேர் பிடுங்கி விழுந்துவிட்டது
ஊரே சாஞ்சி நிற்குது அந்தசாலையில்,
கலவரத்தில் ஒத்த கையிழந்த
சுடலை மயங்கி விழ
108 ஆம்புலன்ஸ்ல தூக்கிட்டு போறதென
மூக்கம்மா பேரன் போனில் சொல்லும் போது
மின்சாரம் தாக்கியது போல இருந்தது மனசு.

                                             -நன்றி:கணையாழி
                                            பிப்.2013