அது ஒரு
ஞாபகத் தென்றல் வீசிய காலம்
இன்று கைக்குழந்தையோடு
உன்னைப் பார்க்கையில்
மழைக்குக் குக்கிப்போன மிளகாய் செடியாட்டம்
வாடித்தான் போகிறது மனசு,
கணக்கு வாத்தியார்
ரைட் போட்டபின்
யாருக்கு அதிக ரைட் விழுந்திருக்கென
எண்ணிக்கொள்வோமே நான்காம் வகுப்பில்
நினைவிருக்கா?
ஆதாளைச் செடிப்பாலை வாயில் வைத்து
நுரைகண்டு
கிறுக்கு பிடித்தது போல துரத்துவாளே நம் சகதோழி
ஓடி ஒளிவோமே பயத்தை நெஞ்சில் நிறுத்தி
ஞாபகம் இருக்கா?
உன் புத்தகத்தை தோழியொருத்தி லேசா கிழித்துவிட்டாளென
தேம்பித் தேம்பி
மடிக்குள் முகம்புதைத்து
அழுதாயே
ஆறாமல் இருக்கிறது
இன்னுமென் நெஞ்சில்
எனக்கு நல்லா நினைவிருக்கிறது
இண்டர்வெல் தட்டுமணி பெல்லுக்கு
அன்று கூட்டமாய் மான்களைப் போல
துள்ளிக்கொண்டு வந்தீர்கள்
அந்தச் சாலைவீதியெங்கும்
உன் பாதச் சப்தம்
உச்சரிக்கத்தான் செய்கிறது இன்றும்
நீ கடந்து போன பல நாட்களை,
அந்தி பூக்கும் மாலையில்
பள்ளிவிட்ட பின்
கொளைவெட்டபோவோம்,
அப்போது கூட ஒரு சமயம்
மின்னிச்செடியை வெட்டி
பொட்டி நிறைத்து
மேக்குந்தலில் பாலாட்டங்கொளையை
மூடி வந்தபொழுது
வயக்காரரிடம் மாட்டிக்கொண்டதும்
மின்னி நெத்தாக வெடிக்குது
ஞாபகத்தில் இந்நாள் வரை,
நீ ஊரணிக்குள் இறங்கி
குடம் முக்கி
தண்ணியள்ளயில்
உன் முன்னம்
வட்ட வட்டமாக விரிந்து செல்லும்
நீர் வளையங்களாய் நான்,
நமக்குள்ளான
பொருத்தமும்
வருத்தமும்
என்ன தெரியுமா?
ஊரில் நல்ல பேரெடுத்து
ஏமாந்ததுதான்,
கடலும் வானமும்
சேராமல் போனது வருத்தம் தான்
நிலாவின் புன்னகை கண்டு
ரசிக்கும் கடலாக
உன் மெல்லினச் சிரிப்பில்
உயிர் வாழ்கிறேன்,
உன் முகம் பார்த்து எங்கும் சென்றால்
அதிஷ்டமாகுவதால்
உன் தெருப்பக்கம் வருகிறேன்
அடிக்கடி
அதிஷ்டம் மட்டுமல்ல
ஆக்ஸிஜனும் கிடைப்பதால்,
இனிமேல் உன்னைப் பார்க்கக்கூடாதென்று
மனதுக்குள் சபதமிட்டுக்கொண்டு
தெருக்களின் சந்துகளை கடக்கயில்
குறுக்கே வருகிறாய் குலமகலாய்,
நீ
வாக்கப் பட்ட காலம்-என்னுயிர்
தாக்கப்பட்டகாலம்,
உன் நினைவுகளால் ஊருக்குள் உலவுகிறேன்
உன் அன்பைச் சுமந்து தேசத்தில் பரவுகிறேன்,
கோடி வாக்கியம் தேடி கடக்கிறேன்
ஜீவ பாக்கியம் பாடி அழைக்கிறேன்

No comments:
Post a Comment