Friday, 31 May 2013

நடுவுல கொஞ்ச பக்கத்தக் காணோம்


இருபது வயதுக்குவந்த
ஒவ்வொருவரும்
அவர்களுக்கு வருகின்ற
பருவப் பிரச்சினையை
மறைக்கின்றதைப் போலக்
கூச்சப்பட்டிருக்கும்
அந்த மேல் நிலைப் பள்ளி,

விழா மேடையில்
ஜனவரி26 இன்றென
சுதந்திரதினத்தன்று
மாற்றிச்சொன்ன பேச்சி,

பள்ளி
கலை நிகழ்ச்சிகளுக்கு
பெண்வேடம் போடும் சரவணன்,

செல்போனில் நண்பர்களுக்கு
பெண்களைப்போல
பேசச் சொல்லி
உசுப் பே த்தும் பலகுரல் ராஜேஷ்.

ஒரே நிறங்களில்
சேலை , சடைமாட்டி, பூ, செறுப்பு, அணிந்து
பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களோடு
சிரித்து சிரித்து பேசும் பிரியங்கா டீச்சர்.

தினமும்
முதல் பாடவேளையில்
வருகைப் பதிவேடு சுமந்து வரும்
விஜிதா அக்கா,

பெளதிக வகுப்பு
இடையிடையே அதான்டா போட்டு பேசும்
குண்டு வாத்தியார்,

இண்டர்வல் நேரத்தில்
எறும்புபோல போகச் சொல்லி
விசிலும் கம்புமாக கத்திக்கிட்டுத்திரியும்
சொட்டை பி.டி. சார்.

ஏழாம் வகுப்பு
ஸ்டெல்லா டீச்சருக்கு
லவ்லெட்டர் கொடுத்து
ஹெட்மாஸ்டரிடம் மாட்டிக்கிட்ட
தமிழய்யா பாரதி,

இப்படி
பள்ளிக் கால ஞாபகப்புத்தகத்தில்
நடுவுல சில பக்கங்கள்
காணாமல் போகின்றன
காலச்சுழியில்,

நினைவில் நின்ற சில பக்கங்கள் மட்டும்
சந்திக்கின்ற வேலைகளில்
அவசர வாசிப்பை நடத்தி
மகிழ்கின்ற போது
கடந்தகால மகிழ்ச்சியில்
பள்ளிச் சிறுவர்களாகி
ஓட ஆரம்பிக்கிறது நெஞ்சில்,

கருவேல மரம் சூழ்ந்து
நினைவுகள் இடிந்த
கரும்பலகைப் பள்ளிக்கூடம்,
துருபிடித்த கொடி மரம் மட்டும்
எதையோ சொல்வதைப் போலிருந்தது
அவ்வழியே ஊர்க் கோவில்கொடைக்கு
காரில் போகின்ற போது.

No comments:

Post a Comment