Monday, 6 May 2013

பகைத்திறம் தெரிதல்

இருளைக் கவ்வும்
அந்திமாலைப் பொழுதில்
சகதிகளுடன் சஞ்சலத்தில்
சாய் கோபுரமாய் மருத நில வேந்தன்,

இதயக்குரல்கள் விம்ம விம்ம
அவனின் உழவுப் பாட்டு
ஊர்வலம் போகிறது
காற்றில் ஆகாய மார்க்கமாக,

ஏகாந்த வேளையில்
ஏற்றப் பாட்டிற்குத்
தலையசைக்கும் நாத்துப் பயிர்கள்;

கட்டடங்களால் காய்ந்து
போய் கொண்டிருக்கினறன
எம் முப்பாட்டன் வெட்டிய
ஏரிகளும் ஆறுகளும்
வீட்டு மனைகளாக.

நாகரிகம் தந்தவர்கள்
சாப்பாட்டுக்கு வழியின்றி
உழவை மறந்த எடுபிடிகளாய்.

ஊருக்குச் சோறு போட்டவன்
மக்கள் மண் மரம் செடி
பறவை விலங்கொடு வாழ்ந்தவன்
நினைவு தாளாது
கூண்டுக்குள் பறவையையும்
தொட்டியில் செடிகளையும்
வளர்த்து மகிழ்கிற
மருத நிலவகையறாக்கள்.

நாத்து நட்டு களையெடுத்துப்
பயிர் வளர்த்த வரப்போரத்தில் ஒருத்தி
வரப்போகும் வறுமையைச் சுமந்து உழத்தி.

மருத நிலத்தைப் போலவே
கரையோரம்
ஒதுங்கிக் கிடக்கின்றன
மணல் லாரிகள்
அருகே வற்றிய நதி.

                          -நன்றி:பச்சையப்பன் ஆண்டுமலர்-
                          2011-2012

No comments:

Post a Comment