Monday, 6 May 2013

ஞாபகக்குடை

எண்பது காலகட்டம்
ஊரெல்லாம் ஒரே கலவர கூச்சல்
சாலை மறிக்க
ரோட்டோர மரத்தை வெட்டயில்
முறிந்தது கோடாரி-
அன்றிலிருந்து சாமிமரமென பேரெடுத்தது ஊரில்
பத்து வருசப் பஞ்சத்த போக்க
அடைமழை பேஞ்சது,
மாயாண்டிக்கு ரெட்டபுள்ள போறந்தது,
மூக்கம்மா வயசுக்கு வந்தது,
சங்கிலியும் சாத்தாயும் கூட்டிட்டு ஓடியது,
பினாங்கு போன உடையான்
மீசையோட வந்ததென
அந்த வருடத்தை
ஞாபக்குடை பிடித்து
கம்பீரமாய் நின்ற அந்த ஒடை மரம்
முந்தா நாள் பேஞ்ச மழைக்காத்தில்
வேர் பிடுங்கி விழுந்துவிட்டது
ஊரே சாஞ்சி நிற்குது அந்தசாலையில்,
கலவரத்தில் ஒத்த கையிழந்த
சுடலை மயங்கி விழ
108 ஆம்புலன்ஸ்ல தூக்கிட்டு போறதென
மூக்கம்மா பேரன் போனில் சொல்லும் போது
மின்சாரம் தாக்கியது போல இருந்தது மனசு.

                                             -நன்றி:கணையாழி
                                            பிப்.2013

No comments:

Post a Comment