Tuesday, 23 July 2013

மண் குவிக்கும் வேர்கள்


சேதிகள் உறவாடும் ராத்திரி
தோழிகளின் பேச்சுகள் இடையே
அவரவர் வருகைக் காரணம்
முணுமுணுத்தன
படிக்க முடியாத நாக்குகள்-

அக்கா கல்யாணத்தால்தான்
படிக்கமுடியாமல்போனது
ஒருதோழிபேச்சாய்-

திடிரென அம்மா இறப்பு
படித்த அக்கா வீட்டுக்குத் துணையாக நிற்க
உடன் எனது பள்ளிக் கால்களும் நின்றன
மற்றொரு தோழி பெரு மூச்சாய்-

முட்டி முட்டி படித்தேன்
மர மண்டைக்கு ஒத்து வரலனு
சில தோழிகள் சலிப்பாய்-

ஒவ்வொருவராக சொல்லச் சொல்ல
கண்ணீரைக் கக்கின
முகில் கண்கள்-

சில பள்ளிச் சீருடைகள் விம்மின
பஞ்சாலைத் தோழிகளின் விடுதியில்,
விவரச் சேதிகள் தொடர
நடுநிசிகடந்து
இருள ஆரம்பித்தன கண்கள்.

வெளிச்சம் பெற அதிகாலை எழுந்து
தனக்கான வாழ்வை தானமைக்க,
கவனிக்க முடியாத நாற்றுகள்
கவனிக்கப் ப டாத வேர்கள்
மண்குவிக்க தயாராகின்றன.

No comments:

Post a Comment