Monday, 6 May 2013

ரயில்முகப் பயணம்

தண்டவாளம் அருகில்
ஒரு சுற்றுச் சுவரோரம்
சாத்தி வைக்கப்பட்டிருந்தது
உடை பட்ட கண்ணாடி ஒன்று,
தினமும் காலையில் வேலைக்குச் செல்கிறேன்
ஒரு முகத்தைக் காட்டியது-
மாலையில் திரும்புகிறேன்
வேறொரு முகம் காட்டியது-
உற்றுப்பார்க்கிறேன்
பெரிய முகத்தைக் காட்டியது-
சற்று விலகிப் பார்க்கிறேன்
எதிரிலுள்ள மரத்தைக்காட்டியது-
வளைவு கடந்து திரும்பிய போது
இன்னொரு முகத்தைக் காட்டியது-
வெகுதூரம் கடந்து வந்து விட்டபிறகும்
இப்போதும் நினைக்கிறேன்
அப்போதும் ஒரு புதிய முகத்தைக்காட்டியது-
அது வீட்டுக்குளிருந்த பொழுது
ஆசை ஆசையாய்
அம்மாவின் வியர்வை முகம்,
அப்பாவின் ஆவேச முகம்,
தம்பியின் மழலை முகம்,
பாட்டியின் சுருக்கு முகம்,
தாத்தாவின் பொக்கை முகமென
இப்படி எத்தனையெத்தனை
முகங்களைப் பார்த்த கண்ணாடி
எனக்குள் எதை எதையோ
கதை கதையாய் சொன்னவாறே இருந்தது
ஒவ்வொரு பொழுதும் அவ்வழியாக
ரயிலில் கடக்கிற பொழுது
 
முகவை-15

No comments:

Post a Comment