Sunday 29 September 2013

ரெக்கை முளைத்தது


இதயத்தின் பக்க வாத்தியக் கவிதை
வீசிச் செல்லும் ஒவ்வொரு நிமிடமும்
பெரும் சுவர்க்க நிலையை அடைய வைக்கிறது
வெளியேறும் அழுக்கு வார்த்தைகள் தந்த மகிழ்வை
வெள்ளைச் சீர்களில் காணமுடியவில்லை
முடிவிலியாக நீளும் மனித மரணத்தின் சாவியை
ஒவ்வொரு நிமிடத்தின் பின்னிருக்கையும் கடந்துதான் வருகிறது
ஒவ்வொருவரின் கைகளிலும் மாறி மாறி
மனம்தான் என்னவோ ஒப்புக் கொள்ளவே செய்வதில்லை
பதுக்கி வைத்த பெரும் செல்வமாய் தெரிகிறது
உடனிருந்த வரை,
காலன் வந்து கேட்கிற போது
வரவு செலவு கணக்கின் கடைசி பக்கத்தை மட்டும்
கிழித்துக் கொண்டு அழுகிறோம்
எல்லோருமாக சேர்ந்து,
ரெக்கை முளைத்த உ யிரின்
பறத்தலைக் கண்டு மகிழாமல்
கூட்டுக்குள் அடக்கி வைப்பதை
சொந்தம் கொண்டாடுகிறோம்,
ஓர் உண்மையும் தெரியாமல்.
முடித்து வைக்க பிரயாணமாகும் வாழ்வில்
தொடங்கி வைக்கப் பிரயாணமாகும் வாழ்வென
வாசிக்கப் பழகுவோம் இதயத்தின் பக்க வாத்தியக் கவிதை,
மெல்லமெல்ல அதன் காட்டை நோக்கி பறக்கிறது
ரெக்கை முளைத்த உயிர்.

Saturday 28 September 2013

என்னாச்சு இவளுக்கு


உன்னிடம்
மெல்லவும் முடியாமல்
முழுங்கவும் முடியாமல்
பதில் மொழிகள் கடலலையாய் மோதுகிறது
என் நெஞ்சில்,
உன் வீட்டில் சிறு சண்டையென்றால்
எனக்கு மிஸ் கால் கொடுத்து,
உன்னைப் பிடிக்கவில்லை
உன் முகம் பிடிக்கவில்லை
உன் குறுந்தகவல் பிடிக்கவில்லை
உன் செல்நம்பர் பிடிக்கவில்லை
உலகத்தில் எதுவுமே பிடிக்கவில்லை
சிறு நிமிடம் கூட தாமதிக்காமல்
சட்டென்று சொல்லிவிடுகிறாய்,
என்னாச்சு இவளுக்கென
ஏங்கிக் குதிக்கிறது விழியிலிருந்து கண்ணீர்
உனக்காக சேமித்து வைத்த ப்ரியங்கள் எல்லாவற்றையும்
நினைத்து நினைத்து.

யார்றா அந்தப் புள்ள


இதய மோதிரமான காதல்
உன்னிடம்
அடகு வைத்த பின் மீட்க முடியாதவனாய்
ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக் கொண்டிருக்கிறேன்
இப்போது
யாரேனும் அலைபேசியில்
சராசரி பேச்சைக் கடந்து
சிலவை பேசத் தொடங்கினால்
பேச்சினூடாகவே
பழக்க தோஷத்தில்
உன் பெயரைச் சொல்லி
மாட்டிக் கொள்கிறேன்,
எல்லோரையும் போல கேட்டுவிட்டார்கள்
அம்மாவும் அப்பாவும்
யார்றா அந்தப் புள்ளை என்று,
சொல் பேச்சைக் கேக்க மாட்டுது
உன் கட்டளைக்கு அடங்காத
என் டார்ச்சர் பேச்சைப்போல,
அடுத்தவர் பேச்சினூடாக உன்பெயரை மறைப்பதில்
உன்நினைவில் ஊறிப்போன மனசு.

அக்கறைக் கவனங்கள்


மதுக் கடைப் பாரில்
குடிக்கிற பேச்சுகள்,
திறந்து வைத்த புட்டிகளாய்
குறைகின்றன
மனைவிமார்களின் மீது கொண்ட
பாசங்கள்,
ஒருவர் பேச்சை
ஒருவரும் கேட்பதில்லை
தள்ளாடிப்போன அவரவர் அக்கறைக் கவனங்கள், 

சரக்கூத்தாத நெகிழி குவளையைப் போல 
காற்றிலாடும் குடும்பக் கதை.

அன்புள்ள வங்கணைகாரி (சிநேகிதி)

திண்டிவனம் வீரமுத்து கோனார் மகள் நீ
இராமநாதபுரம் செல்லையா உழவர் மகன் நான்
அதிகாலை எழுந்ததும்
சாணி கரைத்துத்தான்
முற்றம் தெளித்துக்கொண்டிருக்கிறார்கள்
உங்க அம்மாவும் 
எங்க அம்மாவும் அன்றிலிருந்து இன்றுவரை,
பேத்திகளுக்காகவே காது வளர்த்த பாட்டிகள்
உங்க வீட்டோடு ஒண்ணு
எங்க வீட்டோடு ஒண்ணு.
உங்க வீட்டு செம்மறி ஆடும் ஒரு குட்டி போட்டுள்ளது
எங்கவீட்டு பசுமாடும்ஒரு கன்று போட்டுள்ளது போன மாசம்
எல்லாத்தையும் விட
நீயும் பனிரெண்டாம் வகுப்பு கணிதப்பிரிவு
நானும் பனிரெண்டாம் வகுப்பில் கணிதப்பிரிவு,
ரெண்டே ரெண்டு முறைதான் சந்திச்சிருக்கோம்
டி.என்.பி.எஸ்.சி க்கு விண்ணப்பிக்கும் போது
பாரிஸ் தபால் நிலையத்தில் மட்டும்,
நீ யாரோ
நான் யாரோ
எப்பிடியினும் அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே
பேஸ்புக் யூசர்நேம் பாஸ்வேர்டு போல