Saturday 22 June 2013

அறுபடாத கொடியின் நஞ்சுப் பக்கங்கள்.... தாயின் வாயில் சேயின் உயிர்...

தலைமுறைப் பஞ்சம் தலை விரித்து
தரை மண் புழுதியான காலம்,
காலாரா நோய் குத்தகைக்கு எடுத்த
கொலைப் பசிக் கிராமம்,
கோரைப் புல்லால் மேய்ந்த குடிசையில்
கணவன் அப்பனோடு வயிறு வற்றிய கர்ப்பிணி,
கரட்டுக்காட்டு வரப்புகளில்
அன்றாடப் பசி தகிக்க கிழங்கு பறிக்கப் போனதில்
மாமன் இறந்த செய்தியொட்டி புருஷனின் கைகளில்
ஒன்றிரண்டு கொட்டுக் கிழங்குகள்,
பச்சத் தண்ணீர் பசியாற்றி
அரைத் தூக்கம் கழிந்தது அற்றைய நாளில்,
மறு தினம்
கத்தாழைக் காட்டுப் பகுதியில்
இரை தேடிச் சென்ற தாலியின் கால்கள் திரும்பவேயில்லை,
வழக்கத்துக்கு மாறாய் அந்நாளில்
வெறித்துக் காஞ்ச வானத்தில் வட்டமிட்டபடி
காகக் கூட்டமும், மகிழ்ச்சிப் பருந்துகளும்.
இரவைக் கவிழ்த்தி, பகலை அணைக்கிற சூரியன் கடந்த
அடுத்த கணம் வீட்டுக்குள் வலியோடு
வயிற்று நெருப்பிலிருந்து ஒரு கதறல் ஒலி
யாருமில்லா ஊர்களில் ஏகப் பரவுகிறது,
ஊரைத்தின்ற பசி காண மெல்ல திறக்கிறது
நஞ்சுக் கொடி அறுபடாமல் பச்சிளம் கண்,
தாய்மையின் உலக வழக்கத்தை எட்டி உதைந்துவிட்டு
பஞ்சத்தின் பசியில்
கழுகாகிறாள் தாய்,
ஈன்ற வயிற்றுக் கோரப் பசியால்
பிய்க்கிறாள் இரண்டு கைகளில்,
குடிசையை விட்டு வெளியேறத் துடிக்கிற
அந்தத் தலைமுறைப் பஞ்சத்தின்
கடைசி உயிரின் வயிற்றை....

No comments:

Post a Comment